Home /News /tamil-nadu /

கோவில் நகை: அரசின் முடிவுக்கு தடை போட்ட உயர் நீதிமன்றம்!

கோவில் நகை: அரசின் முடிவுக்கு தடை போட்ட உயர் நீதிமன்றம்!

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட நகைகளை கணக்கெடுக்க அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம்,   அறங்காவலர்களை நியமிக்கும் வரை நகைகளைத் தங்க கட்டிகளாக உருக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

    அறங்காவலர்கள் நியமிக்கும் வரை கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்க கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத நகைகளை உருக்கித் தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்ய இந்து அறநிலையத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.  தமிழக அரசின் இந்த முடிவுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,  இன்டிகேட் கலெக்டிவ் என்ற அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    அதில், கடந்த 11 ஆண்டுகளாகத் தங்க நகைகள் மதிப்பீடு செய்யப்படவில்லை என்றும்  தற்போது திடீரென மதிப்பீடு செய்யப்பட்டுத் தங்கக் கட்டிகளாக மாற்றப்படும் என்றும் அது வங்கிகளில் முதலீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது அறநிலையத் துறை சட்டத்திற்கு விரோதமானது என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும்,  அறங்காவலர்கள் பணிகள் பல இடங்களில் காலியாக இருக்கும்போது இந்தப் பணியிடங்களை நிரப்பாமல் நகைகளை மதிப்பீடு செய்வதோ அல்லது உருக்கித் தங்கக் கட்டிகளாக மாற்றுவதோ சட்டவிரோதமானது என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மன்னர்கள் போன்றோர் கோயிலுக்கு வழங்கிய பாரம்பரியமான நகைகளை உருக்கவில்லை என்றும்  காணிக்கையாக வந்த நகைகளை மட்டும் தான் உருக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: கூட்டுறவு வங்கி காலிப்பணியிடங்கள்: அமைச்சர் ஐ.பெரியசாமி முக்கிய தகவல்!


    காணிக்கையாக வந்த நகைகளை உருக்கும் பணியை மேற் பார்வையிடுவதற்காக உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரும், உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரும் அடங்கிய குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் கணக்கெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து,  கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட நகைகளை கணக்கெடுக்க அனுமதி வழங்கிய நீதிமன்றம்,   அறங்காவலர்களை நியமிக்கும் வரை நகைகளைத் தங்க கட்டிகளாக உருக்கக்கூடாது என கூறி வழக்கை டிசம்பர் 15க்கு தேதிக்கு  தள்ளி வைத்தது.  

    மேலும் படிக்க: இல்லம் தேடி கல்வி திட்டம்: சர்ச்சைகள் தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்!

    Published by:Murugesh M
    First published:

    Tags: Chennai High court, Hindu Temple

    அடுத்த செய்தி