பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் தொழில்நுட்ப கோளாறு: 4,000 விவசாயிகள் தவிப்பு

பெரம்பலூர் சர்க்கரை ஆலை

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் லட்சக்கணக்கான டன் கரும்புகள் அரவை செய்யப்படாமல் காய்ந்து வருகின்றன. இந்த நஷ்டத்திற்கு பொறுப்பேற்பது யார் என்ற கண்ணீர் கேள்வியுடன் காத்திருக்கிறார்கள் விவசாயிகள்...

 • Share this:
  பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 2020 மற்றும் 21ம் ஆண்டிற்கான கரும்பு அரவை பணிகள் கடந்த டிசம்பர் 28ம் தேதி துவங்கின. மொத்தம் 7,203 ஏக்கரில் பயிரிட்டுள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் அரவைக்கு பதிவு செய்திருந்தனர். நாளொன்றுக்கு 3000 டன் என மொத்தம் 2 லட்சத்து 10 ஆயிரம் டன் கரும்புகள் அரவை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நவீனமயமாக்கப்பட்ட புதிய பிரிவில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு சர்க்கரைப் பாகு சேமிக்கப்படும் கருவிகள் உடைந்துள்ளன. இதனால் சர்க்கரைப்பாகு வீணாக தரையில் கொட்டியது மட்டுமல்லாமல், மூன்று தொழிலாளர்களும் காயமடைந்தனர்.

  கடந்தாண்டு ஆலை நவீனமயமாக்கப்பட்டதாக கூறினாலும், விபத்து நடந்த இடத்திலுள்ள இயந்திரங்கள் அனைத்தும் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கி வருபவை. அவற்றை மாற்ற வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் ஆலை நிர்வாகமும் அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

  அரவை நிறுத்தப்பட்டதால் வெட்டப்பட்ட கரும்புகள் அனைத்தும் காய்ந்து எடை குறைந்து வருவதாக கூறும் விவசாயிகள், ஏற்கனவே உள்ள நிலுவைத்தொகையே இன்னும் கிடைக்காத நிலையில் இது மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என கவலை தெரிவிக்கின்றனர்.

  பெரம்பலூர் ஆலையில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் கரும்புகள் அனைத்தும் தஞ்சை, கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆலைகளுக்கு அனுப்படுகின்றன. இதனால் போக்குவரத்து செலவு அதிகரித்து தங்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் எனவும் கூறுகின்றனர்.

  மேலும் படிக்க...சசிகலா வருகை, திமுகவிற்குத்தான் சவாலாக இருக்கும் -

  மாற்று ஆலைகளுக்கு அனுப்பும் வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், ஒரு வாரத்திற்குள் பழுது சரி செய்யப்படும் எனவும் ஆலை நிர்வாக அதிகாரி முகமது அஸ்ஸாம் தெரிவித்துள்ளார்.  .


  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: