இட்லி விற்கும் கார் ஓனர்... ஊரடங்கால் வாழ்விழந்த வாடகை ஓட்டுனர்கள் - மீள என்ன வழி?

100 நாட்களாக வருமானம் இல்லை. முதல் 50 நாட்கள் எப்படியோ சமாளிக்க முடிந்தது.அடுத்த 50 நாட்கள் மிக சிரமமாக இருக்கிறது என்கின்றனர் கால் டாக்சி ஓட்டுநர்கள்

இட்லி விற்கும் கார் ஓனர்... ஊரடங்கால் வாழ்விழந்த வாடகை ஓட்டுனர்கள் - மீள என்ன வழி?
டாக்சி ஓட்டுனர் சையது அலி
  • Share this:
கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட அடுத்தடுத்த ஊரடங்கு, எண்ணற்ற அமைப்பு சாரா மக்களின் வாழ்க்கையை 10-15 வருடங்கள் பின்னோக்கி இழுத்துச் சென்று விட்டது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக வாடகை கார், ஆட்டோ உள்ளிட்ட சேவைகள் கடந்த 3 மாதங்களாக முற்றிலும் முடங்கி உள்ளன. மருத்துவ அவசர தேவைகளுக்காக மட்டும் இ பாஸ் பெற்று ஆங்காங்கே ஒருசில வாகனங்கள் இயங்கி வருகின்றன.

தொடர்ச்சியான வருமான இழப்பால் தவித்து வந்த சென்னையை சேர்த்த டாக்சி ஓட்டுனர் சையது அலி, தற்போது குடும்பத்துடன் இட்லி விற்று நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.


"வெல்டிங் கம்பெனியில் கூலி வேலை செய்து கொண்டிருந்தேன், 5 ஆண்டுகளுக்கு முன்பு தான் டாக்சி ஒட்டி பிழைக்கலாம் என்று லோன் போட்டு சொந்தமாக கார் வாங்கினேன். இப்போது இந்த நிலைமை நீடிக்க.. நீடிக்க, என் கார் என்னை விட்டு போய் விடுமோ என்று பயமாக இருக்கிறது" என்றார் சையது அலி.

மேலும் பேசிய அவர்,"மூன்று மாதங்களாக வருமானம் இல்லாத கஷ்டம் ஒருபுறம், ஏற்கனவே உள்ள கடன்களை கட்ட வேண்டும் என்கிற அழுத்தம் மறுபுறம். என்ன செய்வதென்று தெரியாமல், இப்போது நான் குடியிருக்கும் பாரம்பரிய வீட்டில் பாதி இடத்தை விற்று கடன்களை அடைத்து, கொண்டிருக்கிறோம்" என்றவர்,

"5 பேர் உள்ள என் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தினமும் காலை இட்லி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறேன். ஒரு நாளைக்கு 500 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. முன்பு நான் ஒரு ஆள் கார் ஓட்டினால் 1800 ரூபாய் வருமானம் கிடைக்கும்.ஆனால், இப்போது என் குடும்பம் மொத்தமும் உழைத்து 500 ரூபாய் வருமானம் கிடைத்து வருகிறது. இவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும், கையில் காசில்லை. இன்னும் சில மாதம் ஊரடங்கு நீடித்தால், இருக்கிற வீட்டையும் விற்கிற நிலை வந்துவிடும் போல" என்று கண் கலங்க தெரிவித்தார்.

தொடர் வருமான இழப்பால் இதுவரை மூன்று டாக்சி ஓட்டுநர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை தெரிவிக்கிறார், தமிழ்நாடு சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர் சங்க மாநில தலைவர் சதீஷ்.
அவர் கூறுகையில்,"ஏற்கனவே கடந்த 4 ஆண்டுகளாக தனியார் டாக்சி பயன்பாடுகளால்,  பல்வேறு சிக்கல்களை வாடகை ஓட்டுனர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது, 100 நாட்களாக வருமானம் இல்லை. முதல் 50 நாட்கள் எப்படியோ சமாளிக்க முடிந்தது.அடுத்த 50 நாட்கள் மிக சிரமமாக இருக்கிறது.

தமிழகம் முழுவதும் உள்ள 75,000 ஓட்டுனர்கள், ஒரு நாளைக்கு 1,800 ரூபாய் குறைந்தபட்சம் சம்பாதிக்க வேண்டும். அதில் 1000 ரூபாய் வரை வாகன பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளுக்கு எடுத்து வைக்க வேண்டும்.

லோன் கட்ட அவகாசம் கொடுத்துள்ளது அரசு. ஆனால், அந்த அவகாசம் முடிந்த மறுநாள் லோன் கட்டாததற்காக எங்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். எங்களுடைய சிபில் ஸ்கோர் பாதிக்கப்பட்டால், மீண்டும் லோன் வாங்க முடியாது" என தெரிவித்தார்.

Also read... நிலவில் பயன்படுத்துற மாதிரி கழிவறை செய்ய ஐடியா இருக்கா...? நாசாவின் பரிசு காத்திருக்கு...

மேலும்,"இ பாஸ் முறைகேடு நடக்காமல் தவிர்த்து, மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வாடகை கார்களை பயன்படுத்த அனுமதி வழங்கியிருந்தால் சென்னையில் உள்ள 3500 ஓட்டுனர் குடும்பங்கள் ஓரளவு சமாளித்து இருக்கும்" என்றவர்,வாடகை கார் ஓட்டுநர்களுக்கு உரிய நிவாரணம் அல்லது 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை வட்டியில்லா கடன் கொடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
First published: June 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading