Tauktae Cyclone:அதி தீவிர புயலாக வலுபெறும் டவ்-தே: தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்!

அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள டவ்-தே  புயல், அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுபெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள டவ்-தே  புயல், அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுபெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

  • Share this:
    அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள டவ்-தே  புயல், அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுபெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்றைய தினம் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இது மேலும் வலுவடைந்து தற்போது புயலாக மாறியுள்ளது. இதற்கு டவ் - தே என வானிலை மையம் பெயரிட்டுள்ளது.

    இந்த புயல் அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுபெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தற்போது  மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் டவ்-தே புயல் நிலை கொண்டுள்ளது.

    இது அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாகவும், அதனை தொடர்ந்து 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாகவும் வலுபெறக்கூடும். இதன் காரணமாக  நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சேலம், கிருஷ்ணகிரி கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள், தெற்கு உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தெற்கு கடலோர மாவட்டங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நீலகிரி,தேனி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்றும், இந்த மாவட்டங்களில் நாளை மறுநாள் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக் காற்று வீசும் என்றும் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  வரும் 18ம் தேதி  இடி மின்னல் சூறைக் காற்றுடன்   கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய இலேசானமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

    இன்று குமரிக்கடல் , மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40- 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதேபோல், மத்திய கிழக்கு அரபிக்கடல், தென் கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோர பகுதி, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 75-85 கிலோமீட்டர்  வேகத்திலும் இடைஇடையே 95 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    நாளை,  மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரள, கர்நாடகா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 70-80 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 90 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே,  மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Murugesh M
    First published: