பண்டிகை காலங்களை மிஞ்சிய விற்பனை... நேற்று ஒரு நாள் மட்டும் டாஸ்மாக் வசூல் எவ்வளவு தெரியுமா..?

டாஸ்மாக் மது விற்பனை

TASMAC | டாஸ்மாக் மூலம் கடந்த நிதியாண்டில் 33 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 • Share this:
  ஊரடங்கு தளர்வில் டாஸ்மாக் கடைகள் திறக்கட்ட முதல் நாளில் 170 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் சென்னை தவிர பிற மாவட்டங்களில் நேற்று திறக்கப்பட்டன. 44 நாட்களுக்கு பின்னர் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கூட்டம் அலைமோதியது.

  லட்சக்கணக்கானோர் கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல், வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து போட்டி போட்டுக்கொண்டு மதுபானங்களை வாங்கிச் சென்றனர். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த விற்பனையில் 170 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்றுத் தீர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதி, கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழகம் முழுவதும் 5300 கடைகளில் 3850 டாஸ்மாக் கடைகள் மட்டுமே நேற்று திறக்கப்பட்டிருந்தன.

  வழக்கமான நாட்களில் நாளொன்றுக்கு 85 முதல் 90 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனையாகும் நிலையில், நேற்று ஒரே நாளில் குறைவான மதுக்கடைகளுடன் மது விற்பனை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

  மேலும், தீபாவளி போன்ற பண்டிகை கால விற்பனையை விட ஒரே நாளில் டாஸ்மாக் விற்பனை புதிய உச்சம் தொட்டுள்ளது. இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மதுபானங்கள் மீதான ஆயத்தீர்வை வரியை தமிழக அரசு உயர்த்தியதால் மதுபாட்டில் சில்லறை விலை 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

  இதன்மூலம் அரசுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் கடந்த நிதியாண்டில் 33 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Vijay R
  First published: