TASMAC : ஒரே நாளில் 164.87 கோடி ரூபாய்க்கு மது விற்பனை - சென்னையை முந்திய மதுரை

டாஸ்மாக்

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக அடைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபான கடைகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில் ஒரே நாளில், 164.87 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் நேற்று திறக்கப்பட்ட மதுக்கடைகளில் ஒரே நாளில் 164 கோடியே 87 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 49 கோடியே 54 லட்சம் விற்பனையாகியுள்ளது. ஒரு மாதத்துக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் நீண்ட நாட்களுக்கு பிறகு மதுபானங்களை வாங்கியதால், மதுப்பிரியர்கள் உற்சாகத்தில் திளைத்தனர்.

    ஊரடங்கு தளர்வின் ஒருபகுதியாக 27 மாவட்டங்களில் திங்கள்கிழமை மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அதன்படி, சென்னை தி.நகரில், சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக போடப்பட்டிருந்த வட்டத்தில் வரிசையில் நின்ற மதுபிரியர்கள், மதுபானங்களை வாங்கினர். முகக்கவசம் அணிந்த வாடிக்கையாளர்களின் கைகளில், கிருமிநாசினி தெளித்த பின்பே மதுபானங்கள் வாங்க அனுமதிக்கப்பட்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மதுரையில் மதுபானங்களுக்கு சூடம் ஏற்றி வழிபட்டனர். மதுபாட்டிலுக்கு முத்தமிட்ட குடிமகன்கள், தலையில் பாட்டிலை வைத்து கொண்டாடினர். காஞ்சிபுரத்தில் காலை 10 மணிக்கு மதுக்கடை திறக்கும் முன்பே குவிந்த வாடிக்கையாளர்கள், மதுபானங்களை மகிழ்ச்சியுடன் வாங்கிச்சென்றனர்.

    திருச்சி மாவட்டத்தில் உள்ள 113 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான கடைகளில் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. காலை 10 மணிக்கு கடை திறக்கப்பட்ட போது ஒரு சில இடங்களில் கூட்டம் காணப்பட்டது.

    இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். பாதிரி கிராமத்தில் ஊரடங்கால் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் கடையை முற்றுகையிட்டதுடன், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

    அப்போது, சம்பவ இடத்திற்கு வந்த வந்தவாசி வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரை பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் கடை நடத்தப்படும் என்றும் கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

    Must Read : பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

    அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 49.54 கோடிக்கும், சென்னையில் 42.96 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் 33.65கோடிக்கும் மது விற்பனை ஆகியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கோவை மண்டலத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: