அதிக விலைக்கு மதுபானங்கள் விற்றதாக 9,319 வழக்குகள்- விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை : டாஸ்மாக் நிர்வாகம் தகவல்

கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்ததாக 2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரையில் நடத்தப்பட்ட சோதனைகளில், 9319 வழக்குகள் கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதிக விலைக்கு மதுபானங்கள் விற்றதாக 9,319 வழக்குகள்- விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை : டாஸ்மாக் நிர்வாகம் தகவல்
டாஸ்மாக் கடை
  • Share this:
கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்ததாக 2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரையில் நடத்தப்பட்ட சோதனைகளில், 9319 வழக்குகள் கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யப்படுவதாகக் கூறி, சேலம் மாவட்டம், ஜாரி கொண்டலாம்பட்டி பஞ்சாயத்து துணைத் தலைவர் குல்லு படையாச்சி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், கடந்த 2003-ஆம் ஆண்டு டாஸ்மாக் விதிப்படி, மதுபானங்கள் அதிக விலைக்கு விற்க தடை விதிக்க வேண்டும் என்றும் விலை பட்டியல் ஒட்ட உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசு நிர்ணயித்த எம்ஆர்பி விலையில்தான் மதுபானங்கள் விற்கப்படுகிறதா? மதுபானங்கள் விற்கும் போது, ரசீதுகள் கொடுக்கப்படுகிறதா? ஒவ்வொரு மதுபானக் கடைகளிலும் விலைப்பட்டியல் ஒட்டப்படுகிறதா? அதிக விலைக்கு விற்பவர்கள் மீது கண்டுபிடிக்கப்பட்டு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பல்வேறு கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு விளக்கம் அளிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், உயர்த்தப்பட்ட மதுபான விலை விவரங்கள், அந்தந்த கடைகளில் முக்கியமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகவிலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதைத் தடுக்க, மாதம் ஒருமுறை சோதனைகள் நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் டாஸ்மாக் பணியாளர்களுக்கும், மேற்பார்வையாளர்களுக்கும், ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுவதாகவும், இந்த அபராதத் தொகையை அவர்களிடம் இருந்து வசூலிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடர்ச்சியாக இக்குற்றத்தில் ஈடுபடுவோர் பணி இடைநீக்கம் செய்யப்படுவதாகவும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரையில் நடத்தப்பட்ட சோதனைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்ததாக சென்னையில் 2,129 வழக்குகளும், கோவையில் 1,487 வழக்குகளும், மதுரையில் 2,422 வழக்குகளும், சேலத்தில் 1,365 வழக்குகளும், திருச்சியில் 1,916 வழக்குகளும் என, 9 ஆயிரத்து 319 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் நிர்வாகம், தமிழத்தில் உள்ள 18 மதுபான ஆலைகளிடம் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்வதாகவும், இந்த ஆலைகள் உணவு தரம் மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிமம் பெற்றே நடத்தப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபானங்கள் தரமாக இருக்கிறதா என ஆய்வு செய்ய ஒவ்வொரு மதுபான ஆலைக்கும் கலால் வரித்துறை மேற்பார்வை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் அந்த ஆலையின் அன்றாட நடவடிக்கைகளை அவர் கண்காணிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read... பெற்ற மகளை கொன்று புதைத்து நாடகம் ஆடிய தாய் - 6 ஆண்டுகளுக்கு பின் அம்பலமான உண்மை

மேலும், மதுபானங்களின் தரம் குறித்து சுதந்திரமான அமைப்புக்களைக் கொண்டு பரிசோதித்து சான்றளிக்கப்பட்ட பிறகே விற்பனைக்கு அனுமதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, டாஸ்மாக் நிர்வாகத்தின் பதில் மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என, மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
First published: June 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading