பொதுமக்களின் உயிரை விட டாஸ்மாக் வருவாய் முக்கியமா? அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

கோப்புப்படம்

விசாரணையின் போது, உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது

 • Share this:
  பொதுமக்களின் உயிரை விட டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய் தமிழக அரசுக்கு முக்கியமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

  தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்குகள், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, பிரகாஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

  அதற்கு பதில் மனு தாக்கல் செய்த டாஸ்மாக் நிர்வாகம், ஏற்கெனவே மதுபான விற்பனைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்ததாகவும், ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்ய பரீசிலிக்க வேண்டுமென உத்தரவிட்டதையும் சுட்டிக்காட்டியது.

  அதனால், உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

  மது விற்பனைக்கு ஆதார் கட்டாயம் என உயர்நீதிமன்றம் கூறியது தனிநபர் உரிமையை மீறும் செயல் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 5ஆயிரத்து 338 டாஸ்மாக் கடைகளில், 850 கடைகளில் மட்டுமே டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி உள்ளதாகவும், அனைத்து கடைகளுக்கும் அந்த வசதியை விரிவுபடுத்த செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அவகாசம் தேவை எனவும் தெரிவிக்கப்பட்டது.

  போலீசார் டாஸ்மாக் கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்தியதாகவும், அதிகளவில் கூட்டம் இருந்த இடங்களில் மது விற்பனை நிறுத்தப்பட்டதாகவும் கூறிய டாஸ்மாக் நிர்வாகம், ஒரு மணி நேரத்திற்கு 70 பேர் வீதம், நாள் ஒன்றுக்கு 500 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளது.

  விசாரணையின் போது, உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது

  தனிமனித இடைவெளி உள்பட நீதிமன்றத்தின் பல உத்தரவுகள் மதிக்கப்படவில்லை என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த சமயத்தில் ஒருவர் மது அருந்தினால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, சுலபமாக கொரோனா தொற்று ஏற்பட்டு, மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளதாக பாமக வழக்கறிஞர் கே.பாலு வாதிட்டார்.

  அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி, மக்களின் உயிரை விட வருவாய் திரட்டுவது முக்கியமா என கேள்வி எழுப்பினர்.

  நீதிமன்றத்தால் மதுவிலக்கை அமல்படுத்த முடியாவிட்டாலும், அரசியல் சாசன விதிகளை அமல்படுத்த வேண்டிய கடமை உள்ளதாக கூறிய தலைமை நீதிபதி, பொது அமைதியும், சட்ட ஒழுங்கும் சரியில்லாவிட்டால் நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டிருக்காது எனக் கூறினார்.

  அரசுத் தரப்பில் விரிவான பதிலளிப்பதற்கு அவகாசம் கேட்கப்பட்டதால், விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது.

  Also see...


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
  Published by:Vaijayanthi S
  First published: