தமிழக அமைச்சர்களுக்கு தயாராகும் பங்களாக்கள்..! கட்டமைப்புவசதிகள், என்ன?

மாதிரி படம்

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர்களுக்கான பங்களாக்களை முன்னாள் அமைச்சர்கள் காலி செய்ய தொடங்கியுள்ளனர்.

 • Share this:
  சென்னை கிரீன்வேஸ் சாலையில், அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு 76 பங்களாக்களை அரசு கட்டியுள்ளது. ஒவ்வொரு பங்களாவும் 10 கிரவுண்டுக்கு மேலான நிலப்பரப்பில், 5,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. சபாநாயகருக்கான பங்களா மட்டும் 1 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. பங்களாக்களில் அமைச்சர்களுக்கு இலவச மின்சாரம், குடிநீர், தொலைபேசி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

  இந்த பங்களாக்களை பொதுப்பணி துறை பராமரித்து வருகிறது. இந்த பங்களாக்களில் எந்தவொரு மராமத்து பணிகளாக இருந்தாலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், அதை உடனடியாக அரசு செலவில் சீரமைத்து கொடுப்பார்கள். குறிஞ்சி, முல்லை, பொதிகை, வைகை, என ஒவ்வொரு பங்களாவுக்கு தனி தனிப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

  இப்படி பல வசதிகளை கொண்ட பங்களாக்களை முன்னாள் அமைச்சர்கள் 10 நாட்களுக்குள் காலி செய்து தரும்படி, கடந்த வாரத்தில் பொதுப்பணித்துறை அறிவுறுத்தியது. திமுக ஆட்சிக்கு வந்துள்ளதை அடுத்து, புதிய அமைச்சர்களுக்கு அந்த பங்களாக்களை ஒதுக்கீடு செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர்கள் பலரும் தங்கள் உடமைகளை அரசு பங்களாக்களில் இருந்து எடுத்துச் செல்லத் தொடங்கியுள்ளனர்.

  Also Read :  நாடு முழுவதும் தீவிரமடையும் முழு ஊரடங்கு

  எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மட்டும் இன்னும் தங்கள் பங்களாக்களை காலி செய்யவில்லை. எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் தற்போது குடியிருக்கும் அரசு பங்களாவிலேயே எடப்பாடி பழனிசாமி தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், துணை முதலமைச்சராக இருந்ததால் பங்களாவை காலி செய்ய ஓ.பன்னீர்செல்வத்துக்கு மட்டும் 3 மாதம் காலஅவகாசம் தரப்படும் என கூறப்படுகிறது.

  இதனிடையே முன்னாள் அமைச்சர்கள் காலி செய்துள்ள பங்களாக்களில் புதிய வண்ணம் பூசுதல் உள்ளிட்ட மராமத்து பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிவடைந்த உடன் அங்கு புதிய அமைச்சர்கள் குடியேறவுள்ளனர்.
  Published by:Vijay R
  First published: