முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் - வானிலை ஆய்வுமையம்

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் - வானிலை ஆய்வுமையம்

மழை

மழை

வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேடை, திருப்பத்தூர், சேலம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தகவல்.

  • Last Updated :

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென மழை பெய்த நிலையில், வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சியால் 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் பருவம் தவறி பெய்த மழையால், ஏராளமான பயிர்கள் நீரில் மூழ்கி, விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக கடும் பனி காணப்பட்ட நிலையில், மீண்டும் பருவம் தவறி திடீரென மழை பெய்துள்ளது. சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு நகரில் பல பகுதிகளில் பரவலமாக மழை பெய்தது. இதனால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும்பாலான இடங்கள் இருளில் மூழ்கின. கோயம்பேடு, நுங்கம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவு ஒரு மணியளவில் மிதமான மழை பெய்தது.

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலையில் லேசான மழை பெய்த நிலையில், இரவில் பலத்த மழை பெய்தது. இதனால், சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். அத்துடன் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டதால் ஸ்ரீபெரும்புதூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான அன்னமங்கலம், அரசலூர், தொண்டமாந்துறை, கோரையாறு, மலையாளப்பட்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இதனால் அன்னமங்கலம், தொண்டாமாந்துறை கிராமங்களில் நெல்கொள்முதல் நிலைய வாயில்களில் பாதுகாக்கப்பட்டிருந்த நெல் மழையில் நனைந்தது.

சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான அயோத்திபட்டணம், ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல் உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் கனமழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய மழை இன்று காலை வரை பெய்தது. அதேபோல், கண்ணமங்கலம், கொளத்தூர், காளசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. திருப்பூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்தது.

இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக  வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேடை, திருப்பத்தூர், சேலம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும்,  தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை இடியுடன் லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது . சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்  அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Rain Update, Weather Update