தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக தமிழக நீர் நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்துவருகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு தொடங்கி நேற்று முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்தது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக சென்னையை சுற்றியுள்ள ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுள் செம்பரம்பாக்கம் ஏரி முக்கியமானது. இதன் பரப்பளவு 6,303 ஏக்கர். இந்த ஏரி 3.6 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. மொத்த நீர் மட்ட உயரம் 24 அடியாக இருந்தாலும், மழை காலத்தில், அணையின் பாதுகாப்பை கருதி, 21 அடி நிரம்பியவுடனே, உபரி திறந்து விடுவது வழக்கம். நேற்று காலை முதல் பெய்த மழையால், ஏரியின் நீர்மட்டம் 21 அடியாக உயர்ந்துள்ளது. 2840 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது. கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 715 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பொய்ததால் ஒரே நாளில் 50 மில்லியன் கன அடி நீர் உயர்ந்துள்ளது.
இதேபோல், பூண்டி ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 35 அடியில் 33.15 அடியை எட்டியுள்ளது. சோழவரம் ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 18.86 அடியில் 14.99 அடியையும் ரெட் ஹில்ஸ் ஏரி 21.20 அடியில் 19.61 அடியையும் வீராணம் ஏரி 15.60 அடியில்13.65 அடியையும் எட்டியுள்ளன.
இதையும் படிங்க: செம்பரம்பாக்கம் ஏரியில் ஒரேநாளில் நீர் மட்டம் கிடுகிடு உயர்வு
முல்லை பெரியாறு நீர்மட்டம்:
கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 2,184 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் மட்டம் 128அடியை கடந்தது. இதேபோ, இதுவரை நீர்வரத்தின்றி காணப்பட்ட மஞ்சளாறு அணைக்கு 90கன அடியும், சண்முகா நதி அணைக்கு 10கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. மேலும் ஏற்கனவே முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பி வழியும் சோத்துப்பாறை அணைக்கு விநாடிக்கு நீர் வரத்து 197கன அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 54.72 அடியை எட்டியுள்ளது.
வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chembarambakkam Lake, Heavy Rains, Poondi