• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழ்நாட்டில் இந்த மாவட்டங்களில் இன்று ’மிக கனமழை’.. வானிலை மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் இந்த மாவட்டங்களில் இன்று ’மிக கனமழை’.. வானிலை மையம் எச்சரிக்கை

மழை

மழை

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. அரியலூர், பெரம்பலூர், டெல்டா மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    தமிழ்நாட்டில் அரியலூர், பெரம்பலூர், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று அரியலூர், பெரம்பலூர், கடலூர், தென் தமிழ்நாடு, டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இதேபோல, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கரூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சென்னையில் இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இன்று காலையில் இருந்து சென்னையின் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதனிடையே, பவானிசாகர் அணையின் நீர்மட்டம், நேற்று காலை நிலவரப்படி 101 புள்ளி எட்டு ஒன்று அடியாக இருந்தது. இது 102 அடியை இன்று எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நீர்வள ஆதாரத் துறை தெரிவித்துள்ளது. 102 அடியை எட்டியவுடன், நீர்வரத்தைப் பொருத்து, பவானி ஆற்றில் வெள்ளநீர் திறந்துவிடப்படும் என்றும், ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கையை வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் வெளியிட வேண்டும் என்றும் நீர்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.

    கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக, நட்சத்திர ஏரி, முழு கொள்ளளவை எட்டியது. இதனால், ஏரியைச் சுற்றியுள்ள சாலைகளில் குளம்போல தண்ணீர் தேங்கியது. கோட்டாட்சியர் முருகன், நகராட்சி ஆணையாளர் நாராயணன் ஆகியோர் பார்வையிட்தைத் தொடர்ந்து, மதகு திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. ஆற்றங்கரையோரப் பகுதிகளான டோபிகானல், பெர்ன்ஹில், குறிஞ்சி நகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: