தாம்பரம் காவல் ஆணையராக இருந்து வந்த டி.ஜி.பி ரவி ஐ.பி.எஸ். பணிகாலம் இன்றுடன் முடிவடைகிறது. அவருக்கான பிரிவு உபச்சார விழா
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்தது.
கடந்த 2021 ம் அக்டோபர் மாதம் தாம்பரம் காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ரவி, கடந்த ஜனவரி மாதம் தாம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். பின்னர் டிஜிபியாக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
ரவி ஐ.பி.எஸ்.,1991-ம் ஆண்டு தமிழக கேடர் ஐ.பி.எஸ் அதிகாரி. இவர் பி.எஸ்சி விவசாயம், சைபர் க்ரைம் தொடர்பாக பட்டங்களைப் பெற்றவர். விவசாயத்தில் பிஹெச்.டி முடித்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் ஏ.எஸ்.பி-யாக பணியைத் தொடங்கிய ரவி, அதன் பிறகு ஓசூரில் ஏ.எஸ்.பி-யாகப் பணியாற்றினார். 1994 ஆம் ஆண்டு எஸ்.பி-யாகப் பதவி உயர்வுபெற்று ஒருங்கிணைந்த நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் பணியாற்றினார். பின்னர், திண்டுக்கல், சேலத்தில் டி.ஐ.ஜி.யாகவும் பின் சென்னையில் சட்டம், ஒழுங்கு இணை கமிஷனராகவும், போக்குவரத்து காவல் கூடுதல் கமிஷனராக பணியாற்றியுள்ளார்.
சென்னையில் இணை கமிஷனராக ரவி பணியாற்றியபோது ரௌடிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்தார். மேலும், அவர்களின் குடும்பத்தினருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் வங்கிகளில் கடனுதவிக்கும் ஏற்பாடு செய்தார். போக்குவரத்து கூடுதல் ஆணையராக இவர் பணிபுரிந்த காலத்தில் இ-செலான் முறையை அறிமுகப்படுத்தினார்.
இதையும் படிக்க: பாஜக, இந்துத்துவா ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட காவலர் பணியிடை நீக்கம்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவில் ஏ.டி.ஜி.பி.,யாக ரவி இருந்தபோது சிறார்வதை ஆபாசப் படங்கள், வீடியோக்களைப் பார்த்தவர்கள், பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடந்த பல்வேறு குற்றங்களை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை கொண்டு வந்ததில் தமிழக மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டார். குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க இவர் கொண்டு வந்த "காவலன் SOS ஆப்" குறுகிய காலத்தில் தமிழக மக்களிடயே பெரும் வரவேற்பை பெற்றது.
விழுப்புரத்தில் எஸ்.பி-யாகப் பணியாற்றியபோது ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸில் 40,000-க்கும் மேற்பட்டவர்களைச் சேர்த்து பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தார். ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட எஸ்.பி-யாக இவர் பணியாற்றியபோது பரபரப்பு நிறைந்த தங்கம் முத்துகிருஷ்ணன் கொலை வழக்கு குற்றவாளிகளை திறம்பட விசாரித்து கண்டறிந்ததோடு, நிகழவிருந்த பெரும் ஜாதிக் கலவரத்தை தடுத்து நிறுத்திய பெருமை இவருக்கு உண்டு.
விழுப்புரம் மாவட்ட எஸ்.பி-யாக இவர் பணியாற்றியபோது பெரும் ஜாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் திண்டிவனத்தில் நடந்த அம்பேத்கர் சிலை சிதைப்பு செயலை லாவகமாக கையாண்டு, அம்பேத்கர் சிலையைச் சுற்றி பூந்தோட்டம் அமைத்து பொது அமைதியை நிலைநாட்டினார். மேட்ரிமோனி மோசடி மூலம் 200 இளம்பெண்கள் மற்றும் பெண்களை ஏமாற்றிய லியாகத் அலி கான் என்ற குற்றவாளியை கைது செய்தார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்கள் 25,000 பேர் இன்று ஓய்வு பெறுகின்றனர்
அதேபோல தங்க நகை மோசடியை திறம்பட கையாண்டு ஆயிரக்கணக்கான மக்களை பொருளாதார சிக்கலில் இருந்து காத்தார். காவல் துறையில் தொடர் சாதனைகளை நிகழ்த்தி வந்த ரவி, சென்னை காவல் துறையின் 150-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி “காவலர் நமது சேவகர்” என்ற தலைப்பில் குறும்படத்தை வெளியிட்டார். இந்த குறும்படத்திற்கான திரைக்கதையை எழுதி, தயாரித்ததுடன், அதில் அவரே நடித்திருந்தது பலருக்கும் முன்னுதாரணமாக விளங்கியது.
ரவி ஐ.பி.எஸ்-இன் சிறந்த பணிகளை பாராட்டி கடந்த 2007-ஆம் ஆண்டு சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவலர் பதக்கம் பெற்றார். தொடர்ந்து 2016-ஆம் ஆண்டு புகழ்பெற்ற சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவலர் பதக்கத்தை பெற்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.