டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்,
சென்னையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி இடம்பெறும் என தமிழக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தலைநகர் புதுடெல்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 26-ம் தேதி பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநிலங்களின் சார்பில் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம். அலங்கார ஊர்திகளை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழு தேர்வு செய்கிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு தமிழகத்தின் சார்பில் பங்கேற்க உருவாக்கப்பட்ட ஊர்திக்கு இந்த நிபுணர் குழு அனுமதி மறுத்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். எனினும் தமிழக ஊர்தி டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெற வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இந்த அலங்கார ஊர்தி இடம்பெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆங்கிலேயர்களைத் தீரமுடன் எதிர்கொண்ட நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பைப் பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொள்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழக அலங்கார ஊர்திக்கு ஏன் அனுமதி மறுப்பு: மத்திய அரசு விளக்கம்
இந்நிலையில் நாட்டுப்பற்றிலும் விடுதலை வேட்கையிலும் தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக மாநில அரசின் சார்பில் நடைபெறும் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் அந்த அலங்கார ஊர்தி இடம்பெறும். தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அந்த அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும். மேலும் சமீபத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் போரில் தமிழகம் என்ற புகைப்பட கண்காட்சியை நாட்டின் பிற முக்கிய நகரங்களில் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.