ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: October 19, 2019, 9:06 AM IST
  • Share this:
தமிழகத்தில் கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் 3 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை பல இடங்களில் விட்டு விட்டு மழை பெயதது. கோயம்பேடு, அண்ணாநகர், கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், எழும்பூர், கிண்டி பகுதிகளில் இரவு நேரத்தில் மிதமான மழை பெய்தது. அதேபோல், தாம்பரம் புறநகர் பகுதிகளிலும் மாலை நேரத்தில் மழை பெய்தது. பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் குலசேகரம், களியல், பேச்சிப்பாறை, மார்த்தாண்டம், குழித்துறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக களியல் சப்பாத்து பாலம் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.


கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தின் பழனி, வேடசந்தூர், நத்தம், நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கொடைக்கானல் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்யும் கனமழையால் அப்பர் பவானி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 240 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில், அத்திக்கடவு, பில்லூர் போன்ற பகுதிகளில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே 3 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. மேலும் வெப்பச்சலனம் காரணமாக கோவை, திண்டுக்கல், தேனி, தருமபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ள வானிலை ஆய்வுமையம், லட்சத்தீவு, மாலத்தீவு கடற்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

இதேபோல், வடகிழக்கு பருவமழை மூலம் தமிழகம் அதிகபடியான மழையை பெறும் என்றும், பருவமழை காலம் முடியும் முன்பாகவே சென்னையில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பும் எனவும் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த வாரம் சென்னையின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளார்.

First published: October 19, 2019, 9:06 AM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading