மேற்குத்தொடர்ச்சி மலையோர பகுதிகளில் கனமழை - 3 மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை

தேனி அருகே தமிழக-கேரள எல்லையிலுள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3.85 அடி உயர்ந்தது 119 அடியானது.

news18
Updated: August 9, 2019, 7:16 AM IST
மேற்குத்தொடர்ச்சி மலையோர பகுதிகளில் கனமழை - 3 மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை
கோப்புப்படம்
news18
Updated: August 9, 2019, 7:16 AM IST
தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா, கர்நாடகாவில் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திலும் மேற்குத்தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.

கோவை நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர், குளம் போல தேங்கியதால் போக்குவரத்து முடங்கியது மட்டுமின்றி கடும் நெரிசலும் ஏற்பட்டது.


கோவை அரசு மருத்துவமனையின் உள்நோயாளிகள் பிரிவில் மழை நீர் ஒழுகி தேங்கி நிற்பதால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற வளாகத்தில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் சேதமடைந்தன. தீயணைப்பு வீரர்கள் மரத்தை அப்புறப்படுத்தினர்.

கோவையில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட மக்கள் விடிய விடிய தூக்கத்தை தொலைத்தனர்.

Loading...

நரசிபுரம் பகுதியில் வைதேகி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலையில் தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் அந்த சாலையை பயன்படுத்தும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், கோவை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நொய்யல் ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. நொய்யல் ஆற்றின் சில இடங்களில் சாயக்கழிவுகளால் நுரை பொங்கியவாறு தண்ணீர் ஓடுகிறது.

உடுமலை அருகே திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் 7 மாதங்களுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை, அவலாஞ்சி குந்தா உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த 6 நாட்களாக மழை பெய்துவருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் மலைக்காய்கறிகள் நீரில் மூழ்கியுள்ளன. உதகை-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தலைகுந்தா பகுதியிலுள்ள பாலத்தில் வெள்ள நீர் ஆர்பரித்து செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளாலும், ராட்சத மரங்கள் சாலைகளில் விழுந்ததாலும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

பந்தலூர் அத்திக்குன்னு பகுதியில் மழை நீரில் அடித்து வரப்பட்ட 15 அடி நீள மலைப்பாம்பை அப்பகுதி மக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தமிழக பேரிடர் மீட்பு படையின் மேலும் 3 குழுவினரும், தேசிய பேரிடர் மீட்பு படையில் 180 பேரும், 100-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும் மீட்புப்பணிக்கு வருவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார். உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிட உள்ளதாகவும் கூறினார். மேலும், மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தேனி அருகே தமிழக-கேரள எல்லையிலுள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3.85 அடி உயர்ந்தது 119 அடியானது. அணை வேகமாக நிரம்பிவரும் நிலையில், 700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் மழையால் நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 16 அடி உயர்ந்து 45 அடியானது. ஓரிரு நாட்களில் அணை முழுக்கொள்ளளவான 52 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை, நீலகிரி மாவட்டங்களில் தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

First published: August 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...