வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் வரும் 14ம் தேதி வரை மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தென் மாவட்டங்களான ராமநாதபுரம் , திருநெல்வேலி , தென்காசி , தூத்துக்குடி , தேனி , கன்னியாகுமாரி , சிவகங்கை , விருதுநகர் , திண்டுக்கல் , மதுரையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சேலம், தேனி மாவட்டங்களில் சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையால் வாழை உள்ளிட்ட பயிர்கள் கடும் சேதம் அடைந்துள்ள நிலையில் , சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதோடு, நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
மதுரையில் கோரிப்பாளையம், சிம்மக்கல், தல்லாகுளம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று பிற்பகலில் 2 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. இதனால், அப்பகுதியில் கோடை வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, புதுவயல், கானாடுகாத்தான் உள்ளிட்ட பகுதிகளில் 2வது நாளாக பெய்த கனமழையால், பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல, திருநெல்வேலி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. சேலம் மாவட்டம் தலைவாசல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பலத்த சூறாவளி காற்று மற்றும் இடியுடன் கனமழை பெய்தது. இதில், அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைமரங்கள் முறிந்து விழுந்தன. இதனால், பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : Petrol-Diesel Price Today | பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம் (11-04-2022)
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியிலும் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாழை மரங்களும், வெற்றிலை கொடிக்கால்களும் சேதமடைந்தன. இதனால், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற விவசாய கடன்களை எவ்வாறு திருப்பி செலுத்துவது என தெரியாமல் விழி பிதுங்கி நிற்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக - வட இலங்கை கடலோரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்றும். தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : தென் பழநியில் களைகட்டிய மலர் காவடி விழா... ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு (படங்கள்)
இதனால், 2 நாட்களுக்கு தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் கேரள கடலோரப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.