Home /News /tamil-nadu /

வெளுத்து வாங்கிய மழை... வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி...!

வெளுத்து வாங்கிய மழை... வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி...!

 • News18
 • Last Updated :
  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் மற்றும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விளைந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மிதக்கின்றன.

  தமிழக கடற்கரையொட்டி நிலவும் வளிமண்டல மேடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, ராயப்பேட்டை, எழும்பூர், கிண்டி, திருவல்லிக்கேணி, ராயபுரம், பெரம்பூர், சாந்தோம், மயிலாப்பூர், தேனாம்பேட்டை, கோயம்பேடு, அண்ணாநகர், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் கனமழை பெய்தாலும், பெரும்பாலான நேரங்களில், மிதமான அளவில் மழை பதிவாகிறது.

  சென்னையின் புறநகர் பகுதிகளான மீனம்பாக்கம், ஆலந்தூர், மடிப்பாக்கம், கீழ்கட்டளை, குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம் பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. நெமிலிச்சேரி அருள் முருகன் நகரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினுள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

  மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகுளில் புகுந்தது. இதனால், வெளியே செல்ல முடியாமல் தவித்த பொதுமக்களை திமுக எம்.எல்.ஏ. கருணாநிதி நேரில் சந்தித்தார். இதையடுத்து பொதுமக்கள் ஒன்றாக இணைந்து மணல் மூட்டைகளை அடுக்கி வீடுகளுக்கு சென்ற தண்ணீரை தடுத்து நிறுத்தினார்.

  இதே போன்று பழைய பெருங்களத்தூர், முடிச்சூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் உள்ள தெருக்களை சூழ்ந்த மழைநீர், வீடுகளுக்குள்ளும் புகுந்திருக்கிறது. தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் வசிக்கும் உறவினர்கள் வீட்டுக்கு செல்கின்றனர். சிலர் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

   

  சோழிங்கநல்லூர் அன்னை பாத்திமா குழந்தைகள் மற்றும் முதியோர் நலக் காப்பகத்துக்குள் மழைநீர் புகுந்ததால் அங்கு தங்கியுள்ளவர்கள் கடும் அவதியடைந்துள்ளனர். சிறுவர்களின் பாட புத்தகங்கள், சான்றிதழ்கள் உள்ளிட்டவை நீரில் நனைந்து சேதமடைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், முதியோர் தங்கியிருக்கும் பகுதியும் நீரால் சூழப்பட்டு, அவர்களும் அவதியடைந்து வருகின்றனர்.

  தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கொரட்டூர் ஏரிக்கரையை உடைத்து கழிவு நீரை கலந்து விட்டனர்.

  கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சாத்துக் கூடல் செல்லும் சாலையில் உள்ள கஸ்பா ஏரி நிரம்பி களிங்கு பகுதியில் நீர்வீழ்ச்சியை போல வழிந்தோடியது. மழைநீரில் சிறுவர்கள், இளைஞர்கள் குளித்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

  இதே போன்று, ஜங்ஷன்- எருமனூர் செல்லும் சாலை வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டதால் விருத்தாசலம் ஜங்ஷனிலிருந்து நகர்ப்புற வழியாக மாற்றுப்பாதையில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.

  சிவகங்கை அருகே மேலவெள்ளஞ்சியில் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற கோரி அக்கிராம மக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து சிவகங்கை வட்டாட்சியர் மைலாவதி பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

  கள்ளக்குறிச்சி அருகே புத்தந்தூர் கிராமத்தை ஒட்டி ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள நீரோடையில் உடைப்பு ஏற்பட்டது. பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்ததால் தனித்தீவாக கிராமம் காட்சியளிக்கிறது.

  மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல்-மணக்குடியை இணைக்கும் வகையில் கட்டப்படும் புதிய பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. விளைநிலங்களில் தண்ணீர் புகாமல் இருக்க மணல் மூட்டைகள் அடுக்கியும், டிராக்டர் மூலம் மணலை கொண்டும் கரையை பலப்படுத்தினர் பொதுப்பணித்துறை ஊழியர்கள்.

  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கிருஷ்ணாஜி பட்டினம், எம்.ஜி.ஆர் நகர் பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்ததால் தண்ணீரில் தத்தளித்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

  ராமநாதபுரம் மாவட்டத்தில் சாத்தங்குடி, மீனங்குடி, பாடுவனேந்தல், மேலச்செல்வனூர் உள்ளிட்ட கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் முளைத்துள்ள நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

  இதே போன்று தஞ்சை, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் பேராவூரணி மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் 1000 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்ட சம்பா சாகுபடி தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

  புதுச்சேரியில் இந்திராகாந்தி சதுக்கத்தில் மழைநீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் பார்வையிட்டு தேங்கியிருந்த நீரை வெளியேற்றி போக்குவரத்து நெரிசலை சரிசெய்தார்.
  Published by:Sankar
  First published:

  Tags: Heavy rain, Weather Update

  அடுத்த செய்தி