Home /News /tamil-nadu /

நல்ல மாற்றத்தை தன்னிடம் இருந்து தொடங்கிய தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்!

நல்ல மாற்றத்தை தன்னிடம் இருந்து தொடங்கிய தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வாரம் ஒருநாள், வாராந்திர மாசு இல்லாத அலுவலக பயண நாளாக கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊழியர்கள் மோட்டார் வாகனத்தில் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

  தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய ஊழியர்கள் வாரம் தோறும் புதன்கிழமை அன்று மோட்டார் வாகனங்களில் பணிக்கு வரக் கூடாது என்று மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் ஏ.உதயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சைக்கிள் அல்லது பொது போக்குவரத்து மூலம் பணிக்கு வரலாம் என்று அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், காற்று மாசு, சுகாதாரத்துக்கு பெரும் சுற்றுச்சூழல் ஆபத்து என்பதும் அதனால் உலக அளவில் ஆண்டுக்கு 20 லட்சம் மக்கள் அகால மரணம் அடைகின்றனர் என்பதும் தாங்கள் அனைவரும் அறிவீர்கள். படிம எரிபொருள் பயன்படுத்துவதால் உருவாகும் வாகன மாசு நகரங்களில் காற்று மாசு ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் பெரும் நகரங்களில் காற்று மாசில் 72 சதவீதம் வாகன மாசு உள்ளது என கணக்கீடு செய்து மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமானித்தது.

  வாகனங்களில் எரிக்கும் செயல்முறையின் போது வெளியேறும் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, ஹைட்ரோகார்பன், சல்பர் டை ஆக்சைடு மற்றும் நுண்துகள்கள் மனித சுகாதாரத்துக்கு மிகவும் தீங்கு விளைவிக்கிறது.

  கிளாஸ்கோவில் சமீபத்தில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் உலகின் 3-வது பெரிய பசுமை இல்ல வாயு வெளியேற்றியான இந்தியா, பருவநிலை மாற்ற விளைவுகளால் எதிர்கொண்ட கடுமையான பாதிப்பினால் தற்போது முதல் 2030-ம் ஆண்டுக்குள் 100 கோடி டன் கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதாக அறிவித்தது.

  அனைத்து மக்களின் ஒத்துழைப்பு மூலமே இக்கடினமான இலக்கை அடைந்து சாதிக்க முடியும். தமிழ்நாட்டின் சட்டப்பூர்வமான அமைப்பான தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மாசினை கட்டுப்படுத்த பல்வேறு பசுமை முயற்சிகளை முன்னெடுத்து செல்ல வேண்டி உள்ளது.

  இதையும் படிங்க: சாலையை சரிசெய்ய கர்ப்பிணி மனைவியுடன் பிச்சையெடுத்த இளைஞர்


  எனவே தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனைத்து பணியாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மாசற்ற அலுவலக வாரம்-பயண நாள் என கடைப்பிடித்து தனி நபர் மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுத்துள்ளது. இம்முயற்சியினால் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலக வளாகத்துக்குள் 20 சதவீதம் காற்று மாசு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இதே போன்று பிற அலுவலகத்துக்கு செல்வோர்களும் இப்பசுமை முயற்சியில் இணைந்து கொள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஒரு முன் உதாரணமாக விளங்கும். வாரிய அலுவலகத்துக்கு வருகை தரும் பார்வையாளர்களையும் புதன்கிழமை அன்று மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு ஊக்குவிக்கலாம். இது ஒரு சிறு படியென்றாலும் சுற்றுச்சூழலை காக்கும் பயணத்தின் தொடக்கம் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

  வாராந்திர மாசு இல்லாத அலுவலக பயண நாள்

  இதேபோல், தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். இதையடுத்து, சென்னையிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வாரம் ஒருநாள், வாராந்திர மாசு இல்லாத அலுவலக பயண நாளாக கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  அதன்படி, புதன்கிழமைதோறும் ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் ஆகியோர் பணிக்கு மோட்டார் வாகனத்தில் வருவதை தவிர்க்க வேண்டும். பொது போக்குவரத்து அல்லது சைக்கிள் மூலமும் எலக்ட்ரிக் வாகனமும் பணிக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க: ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கு...வெடிகுண்டு மிரட்டல்.. நேர்மையாக விசாரித்த நல்லம நாயுடு காலமானார்!

  Published by:Murugesh M
  First published:

  Tags: Air pollution, Pollution Control board, Tamilnadu government

  அடுத்த செய்தி