தமிழ்நாட்டின் 30 வது டி.ஜி.பி.யாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 1962 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி பிறந்தவர் சைலேந்திர பாபு. மதுரையில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்தார். இதன் பின்னர் 1987 ஆம் ஆண்டு தமிழக கேடரில் ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்வு பெற்றார்.
தர்மபுரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியை தொடங்கிய அவர், செங்கல்பட்டு கடலூர் காஞ்சிபுரம் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் எஸ்.பியாக பணியாற்றினார். பின்னர், சென்னை அடையாறில் துணை ஆணையராக பணியாற்றினார். பதவி உயர்வு பெற்ற அவர், சென்னையில் இணை ஆணையராகவும் பணியாற்றினார்.
கோவை காவல் ஆணையராக 2010-11 ஆண்டுகளில் பணியாற்றிய போது, அக்காளும் தம்பியுமாகிய சிறுவர்கள் இருவரை கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகளை என்கவுண்டர் செய்தது, கோவை கொடிசீயா மைதானத்தில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடைபெற செய்தது என சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
பின்னர் வடக்கு மண்டல ஐஜி ஆகவும் பணியாற்றிய இவர், லஞ்ச ஒழிப்புத் துறையில் தலைமை அதிகாரி, சிறைத்துறை ஏ.டி.ஜி.பி என தான் பணி புரிந்த துறைகளிலெல்லாம் தடம் பதித்தார். பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கூடுதல் டிஜிபியாக பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில்தான் கடலோர காவல்படைக்கு சொந்தமான டார்னியர் விமானம் கடலில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியது, அந்த சம்பவத்தில் மீட்பு பணியில் சைலேந்திரபாபு கடலோர காவல் படையினருடன் இணைந்து முக்கிய பணியாற்றினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
இதேபோன்று தீயணைப்பு துறையின் ஏடிஜிபியாக இருந்த காலகட்டத்தில் சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது தாம்பரம் முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று நீரில் மூழ்கிய பொதுமக்களை காப்பாற்றிய பணியும் குறிப்பிடத்தக்கது.
புத்தக வாசிப்பு, இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் சொற்பொழிவாற்றுதல் என பல்துறை வித்தகரான இவர் சைக்கிள் ஓட்டுதலில் பெரும் ஆர்வம் கொண்டவர். 500 கி.மீ. 1000 கி.மீ.கள் என இவர் சைக்கிள் ஓட்டுவதோடு அதனை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு மற்றவர்களுக்கும் உந்து சக்தியாக செயல்பட்டவர். நீங்களும் ஐ.பி.எஸ். ஆகலாம், சாதிக்க ஆசைப்படு உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதியவர்.
காவல்துறையில் இவர் ஆற்றிய பணிகளை மெச்சும் வகையில், சிறப்பாக கடமையாற்றியமைக்கான குடியரசுத்தலைவர் விருது, உயிர் காக்கும் பணிகளை மேற்கொண்டமைக்கான பிரதம மந்திரி விருது, தமிழக முதலமைச்சரின் கேலண்டரி விருது, தமிழக சிறப்பு டாஸ்க் ஃபோர்சின் கேலண்டரி காவல்துறை பதக்கம் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் மற்றும் பதக்கங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ் நாட்டின் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.