நீட் ஆள்மாறாட்டம் : ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்த 5 மாணவர்கள் மோசடி

நீட் ஆள்மாறாட்டம் : ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்த 5 மாணவர்கள் மோசடி

நீட் விவகாரம்

உதித் சூர்யா உள்ளிட்ட 5 மாணவர்களும் சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வரும் பிரபலமான நீட் பயிற்சி மையம் ஒன்றில் படித்தவர்கள் என்பது தெரியவந்தது.

  • Share this:
நீட் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட உதித் சூர்யா உள்ளிட்ட 5 மாணவர்கள் ஒரே பயிற்சி மையத்தில் படித்தது தெரியவந்துள்ளது. 3 பேரை கைது செய்துள்ள சிபிசிஐடி போலீசார், ஒருவர் வெளிநாடு தப்பியதாகவும், இடைத்தரகர் தலைமறைவாகியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையும் மருத்துவருமான வெங்கடேசனும் கைது செய்யப்பட்டனர். கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகர் ஒருவருக்கு 20 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து தேர்வில் அவர்கள் ஆள்மாறாட்டத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.

அதுமட்டுமின்றி மேலும் 5 மாணவர்கள் இதேபோல ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு மருத்துவ படிப்பில் சேர்ந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சத்ய சாய் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவி அபிராமி மற்றும் அவரது தந்தை மாதவன், பாலாஜி மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர் பிரவீன் மற்றும் அவரது தந்தை சரவணன், எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர் ராகுல் மற்றும் அவரது தந்தை டேவிட் ஆகிய 6 பேரும் சிபிசிஐடி போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உதித் சூர்யா உள்ளிட்ட 5 மாணவர்களும் சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வரும் பிரபலமான நீட் பயிற்சி மையம் ஒன்றில் படித்தவர்கள் என்பது தெரியவந்தது. கேரளாவைச் சேர்ந்த ரசீத் என்ற இடைத்தரகர் மூலமாக இவர்கள் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதும், இதற்காக அந்த இடைத்தரகர் அடிக்கடி சென்னை வந்து சென்றதும் தெரியவந்துள்ளது.

அதன் அடிப்படையில் 3 மாணவர்கள் மற்றும் அவர்களது தந்தையரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உதித் சூர்யா விவகாரம் வெளியான உடனேயே நாமும் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் இர்ஃபான் என்ற மாணவர் மொரிசியஸ் நாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டதாகவும், தலைமறைவான இடைத்தரகர் ரஷீத்தை தேடிவருவதாகவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

வடமாநில நீட் தேர்வு மையங்களில் அதிகளவில் ஆள் மாறாட்டம் நடந்துள்ளதாகவும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவிந்திரநாத் வலியுறுத்தியுள்ளார்.

Also Watch

Published by:Vijay R
First published: