அரசின் அறிவிப்பால் அதிகரிக்கப் போகும் மின் கட்டணம்...!

”பயனீட்டாளர்களுக்கு  குறைந்த பட்சம் 100 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் சுமை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது”

அரசின் அறிவிப்பால் அதிகரிக்கப் போகும் மின் கட்டணம்...!
மின்சார வாரியம்
  • News18
  • Last Updated: April 22, 2020, 8:10 PM IST
  • Share this:
கொரோனா பாதிப்பு தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது பலர் தங்கள் வாழ்வாரத்தை இழந்து தவிக்கின்றனர். ஊரடங்கு அமலில் உள்ளதால் மின் ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து மின் அளவீடு செய்யும் பணிகளை மேற்கொள்ளவில்லை.

மாறாக பொதுமக்கள் கடந்த முறை (பிப்ரவரியில்) செலுத்திய மின்சார கட்டணத்தை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  வழக்கமாக அளவீடு செய்ய வரும்போது வீடுகள் பூட்டியிருந்தால் இது போன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனால், மின்சார வாரியத்தின் இந்த நடவடிக்கையால 80 சதவீத மக்கள், இனி அடுத்து எடுக்க உள்ள அளவீட்டிற்கு பிறகு கூடுதல் கட்டணம் செலுத்த நேரிடும். கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் மின் கட்டணம் செலுத்தும் போது தமிழகத்தில் குளிர் காலம் என்பதால் மின்சார உபயோகம் மிகவும் குறைவாக இருந்திருக்கும்.


ஏசி, ஃபேன் உள்ளிட்ட மின் சாதனங்களை  அதிகமாக பயன்படுத்தி  இருக்க மாட்டார்கள். அதனால் குறைந்த அளவே மின் உபயோகம் செய்யப்பட்டிருக்கும். அதற்கான கட்டணத்தை செலுத்தியிருப்பார்கள்.

கடந்த மார்ச் மாதம் முதல் வறண்ட வானிலை நிலவுவதால் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்துகிறது. இதனால், மின் உபயோகம் மிக அதிகமாக உள்ளது. மேலும், ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளதால், தொலைக்காட்சி, கணினி, லேப்டாப் என்று வழக்கத்தை விட கூடுதலாகவே மின்சாரம் நுகரப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட அடுத்த இரண்டு மாதங்களுக்கும் இதே நிலைதான் இருக்கும்.

கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், 4 மாதங்களுக்கான மின்சார உபயோகத்தை ஒரே நேரத்தில் அளவீடு செய்யும் நிலையில், ஒரு ஏ.சி வைத்துள்ள  நடுத்தர குடும்பங்களுக்கே மொத்தமாக உபயோகம் 900 யூனிட்டை தாண்டிவிடும். அந்த நிலையில்  அவர்கள் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல்  மின் கட்டணம் செலுத்த நேரிடும்.தமிழகத்தில் வீட்டு மின்சார பயன்பாட்டில் முதல் 100 யூனிட் இலவசமாக வழங்கப்படுகிறது. உதாரணமாக ஜனவரி - பிப்ரவரி மாத்தில் நீங்கள் 150 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியிருந்தால், 100 யூனிட் இலவசம் போக 50 யூனிட்டுக்கான கட்டணத்தை கட்டியிருப்பீர்கள்.

தற்போது, கொரோனா பரவல் காரணமாக மின் அளவீடு எடுக்க முடியாத நிலையால், மார்ச் - ஏப்ரல் மாதத்திற்கு, முந்தைய கட்டணத்தையே செலுத்த வேண்டியது வரும்.

ஆனால், கோடைக்காலம் மற்றும் ஊரடங்கு என்பதால், உங்களது மின் நுகர்வு கணிசமாக அதிகரித்திருக்கும். இதன் பின்னர், மே - ஜூன் மாதத்தில் மட்டுமே அதிகாரிகள் வீட்டுக்கு வந்து மின் அளவீடு செய்ய வாய்ப்பு உள்ளது. அப்போது அவர்கள், கடைசி அளவீடு பிப்ரவரி என்பதால், மார்ச் முதல் ஜூன் வரை உள்ள மின் நுகர்வை குறித்துக்கொள்வார்கள்.

இந்த காலகட்டத்தில் மின் நுகர்வு கணிசமாக அதிகரித்திருக்கும் என்பதால், முன்னர் கூறியது போல, ஒரு ஏசி கொண்ட வீட்டுக்கு 900 யூனிட்கள் வரை கணக்கு செய்ய வாய்ப்பு உள்ளது. இதில், 100 யூனிட்களை இலவச கணக்கிற்கு கழித்து விட்டாலும், 800 யூனிட் மின்சாரத்திற்கான தொகையை செலுத்த வேண்டியது இருக்கும்.

இதில், எங்கு சிக்கல் என்றால் மார்ச்- ஏப்ரல் மாதத்திற்கு அதற்கு முந்தைய கட்டணத்தையே, மீண்டும் கட்டியிருப்பீர்கள், அந்த தொகையை, நான்கு மாதங்கள் கழித்து வந்துள்ள மின் கட்டணத்தில் கழித்துவிடுவார்கள்.

உதாரணமாக, மார்ச் - ஏப்ரலில் நீங்கள், 50 ரூபாய் கட்டியிருந்தால், 4 மாதங்களுக்கான மின் கட்டண தொகை 2000 என்று வந்தால், அதில் 50 ரூபாயை மட்டும் கழித்துக்கொண்டு மீதமுள்ள தொகையை கட்ட வேண்டும். நம்முடைய மின் கணக்கிடும் முறை முழுவதும் சாப்ட்வேர் அடிப்படையில் இயங்குவதால், இப்படித்தான் கணக்கிட முடியும்.

இதில், என்ன சிக்கல் என்றால், மார்ச் - ஏப்ரலில் மின் அளவீட்டை அதிகாரிகள் நேரடியாக வந்து எடுக்காததால், அந்த மாதத்திற்கான 100 யூனிட் இலவச மின்சாரம் நமக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை. மார்ச் - ஏப்ரல் மற்றும் மே - ஜூன் ஆகிய 4 மாதங்களுக்கும் சேர்த்து 100 யூனிட்கள் கழிக்கப்படும். இதனால், பயனீட்டாளர்களுக்கு  குறைந்த பட்சம் 100 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் சுமை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தொழிசாலைகள் வணிக நிறுவனங்களுக்கான  அளவீட்டை அவர்களே எடுத்து, மின்சார வாரியத்திற்கு அனுப்ப  உத்தரவிட்டுள்ளது. இது போன்ற நடைமுறையை வீடுகளுக்கும் பயன்படுத்தலாம் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும், ஜூன் மாதத்தில் மின்சார பணியாளர்கள் அளவீடு செய்ய வரும்போது, வீடுகளில் ஆள் இல்லை எனில், மின் இணைப்பு துண்டிக்கப்படும் அபாயமும் உள்ளது.

மின்சார கட்டணம் தொடர்பான மக்களின் அச்சத்திற்கும், குழப்பத்திற்கும் மின்சார வாரியமே விளக்கம் அளிக்க வேண்டும்.
First published: April 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading