மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீழமாத்தூர் கிராம ஊராட்சியின் முதல் வார்டில், தலா 71 வாக்குகளைப் பெற்று இரண்டு வேட்பாளர்கள் சரிசமமான பலத்தில் உள்ளனர்.
தமிழகத்தின் 27 மாவட்டங்களில் 2 கட்டங்களாக நடந்த உள்ளாட்சித்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீழமாத்தூர் கிராம ஊராட்சியின் முதல் வார்டில் 771 ஓட்டுகள் பதிவாகியுள்ளன.
இந்த வார்டில் பதிவான வாக்குகளை எண்ணும் போது, இப்ராஹிம் என்பவரும் இன்னொரு வேட்பாளரும் தலா 71 வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளனர். ஆனால், இப்ராஹிம் என்பவருக்கு விழுந்த ஓட்டுகளில் ஒரு ஓட்டு வித்தியாசமாக இருந்துள்ளது.
முத்திரை வைப்பதற்கு பதிலாக அந்த வாக்குச்சீட்டில் கைநாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த ஓட்டை செல்லாத ஓட்டு கணக்கில் வைத்துள்ளனர். ”படிப்பறிவில்லாதவர் யாரோ சின்னத்தில் மட்டும் கை நாட்டு வைத்து விட்டார்கள்... இந்த ஓட்டை செல்லாத ஓட்டாக கணக்கில் கொள்ளாமல், தனக்கு அளிக்கப்பட்ட வாக்காக கருதி என்னை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்” என்று இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சின்னத்தில் முத்திரை வைப்பதற்கு பதிலாக கைநாட்டு வைத்ததால், அந்த ஓட்டு செல்லுபடியாகுமா என்ற சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக, வெற்றி அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - நேரலையாக பார்க்க கிளிக் செய்க...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.