9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரு கட்டங்களாக வரும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்டத் தேர்தலுக்கான பிரசாரம், திங்கட்கிழமை மாலையுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். குறுகிய காலத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளில் பல நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், எவ்வளவு பெரிய திட்டங்களை தீட்டினாலும் அது உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக தான் மக்களை சென்று சேரும் என்று குறிப்பிட்டுள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுப் போய் உள்ளதாகவும், மின்சார தட்டுப்பாடு நிலவுவதாகவும் குற்றம்சாட்டினார். சட்டமன்றத் தேர்தலில் தவறான தேர்தல் வியூகத்தால், ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழக்க நேரிட்டதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இதை படிக்க: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? அரசு பேருந்து முன்பதிவு இன்று தொடக்கம்!
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகே மொளச்சூர் பகுதியில் பாஜக வேட்பாளர் பாபுவை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார். அப்போது அவர், பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம், கல்விக்கடன் தள்ளுபடி, சிலிண்டர் இலவசம் என எந்த வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து, பள்ள மோளசூர் பகுதியிலுள்ள கட்சி பிரமுகரின் குடிசை வீட்டுக்கு சென்று தேநீர் அருந்தி உரையாடினார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் திமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்களை ஆதரித்து திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் பிரசாரம் செய்தார்.
மேலும் படிக்க: கலைஞர் மீது ஆணையாக.. ஒரு பைசா லஞ்சம் வாங்க மாட்டோம் - திமுக வேட்பாளர்கள் உறுதிமொழி
நெமிலி ஒன்றிய தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து சித்தேரி, அரும்பாக்கம், ஓச்சலம், நாகவேடு, பருத்திபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வாக்கு சேகரித்தார்.
நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
இதையும் படிங்க: கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்!
இதனிடையே, நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு ஆறாவது வார்டில் திமுகவினர் தேர்தல் முறைகேட்டில் ஈடுபடுவதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக, மாநில தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், உண்மைக்கு புறம்பான செய்திகளை வாக்காளர்களிடம் திமுகவினர் கூறி வருவதாகவும், பொய்யான வாக்குறுதி அளிப்பதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
வாக்குக்கு பணம் வாங்க மாட்டோம்
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குறிஞ்சி நகர் என்ற மலைக்கிராமத்தில் சுமார் 80-க்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன. இந்நிலையில், வாக்குக்கு பணமோ, பொருளோ பெற மாட்டோம் என்று வாக்காளர்கள் ஒவ்வொரு வீட்டிலும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
இதனிடையே, வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை வலியுறுத்தி, காவல் துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். இதில், காவல் துணை கண்காணிப்பாளர், 6 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்துகொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.