Home /News /tamil-nadu /

இரும்பு காலம் எப்படி தோன்றியது.. 4,200 ஆண்டுகள் பழமையான தமிழக இரும்பு பயன்பாடு

இரும்பு காலம் எப்படி தோன்றியது.. 4,200 ஆண்டுகள் பழமையான தமிழக இரும்பு பயன்பாடு

இரும்பு காலம்

இரும்பு காலம்

இந்திய துணை கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் துவங்கி எழுதப்பட வேண்டும் என்பதற்கு மற்றும் ஒரு சான்றாக அமைந்திருக்கிறது மயிலாடும்பாறை அகழாய்வு.

    தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இரும்பு காலம் எப்படி தோன்றியது என்பதையும், தமிழ்நாட்டின் இரும்பு காலத்தையும் பற்றி தெரிந்துகொள்வோம்.

     

    மனித சமூகத்தின் நாகரீக வளர்ச்சியில் முக்கியமான காலக்கட்டம் என்றால் அது இரும்பு காலம்தான். வரலாற்றுக்கு முந்தைய காலக்கட்டத்தை 4 வகையாக பிரிக்கிறார்கள் தொல்பொருள் ஆய்வாளர்கள். பழைய கற்காலம், புதிய கற்காலம், செம்பு கற்காலம், இரும்பு காலம் என பிரிக்கலாம் மனிதனின் நாகரீக காலத்தை.

    விலங்குகளை வேட்டையாட கற்களைப் பயன்படுத்தியது பழைய கற்காலம் என்றும், களிமண் கற்களால் ஆன குடிசைகள் மற்றும் மண்பாண்டங்கள் உருவாக்கியது புதிய கற்காலம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதன்பிறகு மனிதன் அறிந்த முதல் உலோகம் செம்பு.

    உலோகத்தை உருக்கி வார்க்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்த மனித இனம், ஆரம்பத்தில் அவ்வளவு பெரியதாக ஒன்றும் செய்யவில்லை. கற்கருவியையே பெரிதும் சார்ந்திருந்த மனிதர்கள், சில நுண்கருவிகளை செய்வதற்கு மட்டுமே பயன்படுத்திய உலோகம் செம்பு. அதன்பிறகு வந்த இரும்பு காலம் தான், இன்று வரை வளர்ந்துள்ள மனித நாகரீகத்திற்கு அடித்தளம் என்கிறது வரலாறு.

    இதையும் படிங்க: தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் சிலைகள் சிதிலம்... கும்பாபிஷேகம் நடத்திட பக்தர்கள் கோரிக்கை


    ஆரம்பத்தில் ஆயுதங்களை செய்ய மட்டுமே இரும்பை பயன்படுத்திய மனித இனம், இன்று எத்தனையோ கருவிகளை செய்கிறது இரும்பை பயன்படுத்தி. இத்தகைய இரும்பை 4 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தியிருக்கிறது தமிழ் இனம். அதற்கு ஆணித்தரமான ஆதாரத்தை கொடுத்துள்ளது மயிலாடும்பாறை அகழாய்வு.

    கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் ஏற்கெனவே முதல்கட்ட ஆய்வுகள் முடிந்த நிலையில், தற்போது நடைபெறுவது இரண்டாம் கட்ட அகழாய்வு. இதில், கண்டுபிடிக்கப்பட்டுள்ள 70 செ.மீ. நீளமுள்ள இரும்பு வாளும்,  இரும்பு கத்திகளும்தான், இன்று தமிழினத்தின் வரலாற்றை பறைச்சாற்றும் கருவிகள்.

    இந்திய துணை கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் துவங்கி எழுதப்பட வேண்டும் என்பதற்கு மற்றும் ஒரு சான்றாக அமைந்திருக்கிறது மயிலாடும்பாறை அகழாய்வு. ஈமச்சின்னங்கள், பாறை ஓவியங்கள் உள்ளிட்ட அரியவகை தொல்லியல் அடையாளங்களை தாங்கி நிற்கும் மயிலாடும்பாறையில், இப்போது கிடைத்திருப்பது இரண்டு கரிம மாதிரிகள்.

    இதையும் படிங்க: மற்ற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக சேர்க்க முயற்சி: ஆளுநர் ஆர்.என்.ரவி


    அமெரிக்காவின் பீட்டா பகுப்பாய்வு மையத்தில் இது தொடர்பாக நடைபெற்ற ஆய்வில் கிடைத்திருக்கின்றன ஆச்சரியமான முடிவுகள். கரிம மாதிரிகளின் காலம் கி.மு. 1615 மற்றும் கி.மு. 2172 என்று கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துள்ளது என்பது உறுதியாகியுள்ளது.

    இரும்பின் பயன்பாடு வந்த பின்னரே, அடர்ந்த வனங்களை அழித்து வேளாண்மை செய்யத் தொடங்கியது மனித இனம். இதன்மூலம், தமிழ்நாட்டில் வேளாண்மை சமூகம் தொடங்கிய காலம் குறித்து கேள்விக்கு பதில் கொடுத்திருக்கிறது இந்த அகழாய்வு. இந்தியாவில் இதற்கு முன்பு 28 இடங்களில் இரும்புக் கால பண்பாடு நிலவியதாக கணக்கீடுகள் உள்ளன.

    இவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளி, காலத்தால் முந்தியது தமிழினத்தின் இரும்பு பயன்பாடு என்று நிரூபித்துள்ளது மயிலாடும்பாறை மண்ணில் கிடைத்தவை. ஏற்கெனவே கீழடி தமிழர் நாகரீகத்தின் தாய்மடி என்று கூறப்படும் நிலையில், அடுத்தடுத்து ஆச்சரியமூட்டுகின்றன அகழாய்வு முடிவுகள்.  இதன்மூலம், கல் தோன்றி மண் தோன்றா காலத்தே, முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி என்று நிரூபணமாகிக் கொண்டிருப்பது நிதர்சனம்

    செய்தியாளர்- பத்மநாபன்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Archaeology, Tamilnadu

    அடுத்த செய்தி