இரண்டாவது நாளாக தொடரும் அரசு மருத்துவர்களின் போராட்டம்... நோயாளிகளுக்கு பாதிப்பு இல்லை என்கிறது அரசு...!

மருத்துவர்கள் போராட்டம்

 • News18
 • Last Updated :
 • Share this:
  தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், போதிய மருத்துவர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருவதால், நோயாளிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

  காலமுறை ஊதியம், பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில், தமிழகம் முழுவதும், 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர். சென்னை கீழ்பாக்கம், ஸ்டான்லி மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வாயிலில் அமர்ந்து 2-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  மருத்துவர்களை திமுக எம்.பி தயாநிதி மாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டி.கே.ரங்கராஜன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

  மருத்துவர்களின் போராட்டம் காரணமாக, கீழ்பாக்கம், ஸ்டான்லி, ராஜீவ் காந்தி மருத்துவமனைகளுக்கு காய்ச்சலுக்கு வரும் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். பச்சிளங் குழந்தைகளுடன் மருத்துவர்களுக்காக காத்திருக்கும் அவலநிலையும் உருவானது.

  இதேபோல, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் அரசு மருத்துவர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் நிலையில், தீக் காயம் போன்ற அவசர சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்கள் இல்லாததால் செய்வதறியாமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

  அரசின் அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதனிடையே, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ், மருத்துவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். குறைந்த அளவிலான மருத்துவர்களே போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், நோயாளிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் பீலா ராஜேஷ் கூறினார்.

  தொடரும் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு விரைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  Published by:Sankar
  First published: