தமிழகத்தில் தீவிர ஊரடங்கு.. இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கடந்த ஓராண்டு காலத்தில் நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள் அடைந்துள்ள துன்ப துயரங்கள் அளவில்லாதது. ஏராளமான மருத்துவர்களை நாம் இழந்துள்ளோம்.

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து சட்டமன்றக் கட்சி உறுப்பினர்கள் குழுக்கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. கூட்டத்தினரிடம் பேசிய முதல்வர் முழு ஊரடங்கை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை எனத் தெரிவித்துள்ளார்.

  மேலும் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு.செய்யப்பட்டுள்ளது. அதாவது தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை ஒரு நாள் மட்டும் தளர்வு அறிவித்துவிட்டு ஊரடங்கை அமல்படுத்தலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. முழு ஊரடங்கில் அனைத்து கடைகளும் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. மருந்தகங்களுக்கு மட்டும் அனுமதி இருக்கலாம். காய்கறிகள் கடைகள், உணவகங்கள் குறித்து எதுவும் முடிவாகவில்லை. இதுதொடர்பான அறிவிப்பு சற்று நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  அனைத்துச் சட்டமன்றக் கட்சி உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் பேசிய முதல்வர்,”தமிழகத்தில் 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரையிலான முழு ஊரடங்கு காலம் முடிய இருக்கிறது. கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா என்று கேட்டால், குறைந்துள்ளதே தவிர கட்டுக்குள் இன்னும் வரவில்லை என்றே தான் சொல்ல முடியும்.

  முழு ஊரடங்கு பிறப்பிக்கும் போது பொதுமக்களின் நன்மைக்காக சில தளர்வுகளை நாம் அறிவிக்கிறோம்.தேவையான மளிகை, காய்கறிகளை வாங்கிக் கொள்வதற்காக மட்டுமே அந்தத் தளர்வுகளை அறிவித்தோம். ஆனால் அந்தத் தளர்வுகளைப் பயன்படுத்தி அவசியமில்லாமல் வெளியில் சுற்றுவதும் சிலருக்கு வழக்கம் ஆகிவிட்டது. இப்படி வருபவர்களை அறிவுரை சொல்லி அனுப்பி வையுங்கள் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டோம்.அத்தகைய அன்பான அறிவுரைகளையும் சிலர் கேட்பதாகத் தெரியவில்லை. முழு ஊரடங்கு என்பது பொதுமக்களின் நன்மைக்காகத் தான் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் உயிர்களைக் காக்கவே, பாதுகாக்கவே போடப்பட்டுள்ளது. அதனை உணராதவர்களாக பொதுமக்களில் சிலர் இருப்பது வேதனை தருகிறது.முழு ஊரடங்கை சிலர், ஏதோ விடுமுறைக் காலம் என்பதாக நினைத்து ஊர் சுற்றி வருகிறார்கள்

  .இது விடுமுறைக் காலம் அல்ல, கொரோனா காலம் என்பதை உணராமல் இன்னமும் சிலர் இருக்கிறார்கள்.
  ‘கொரோனாவை வாங்கிக் கொள்ளவும் மாட்டேன் - கொரோனாவை அடுத்தவருக்கு கொடுக்கவும் மாட்டேன்’ என்று பொதுமக்கள் உறுதி எடுத்துக் கொண்டால் மட்டும் தான் இந்த நோய் தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

  இதனை உணர்த்துவதற்காகத் தான் பல்வேறு திரையுலகக் கலைஞர்களை வைத்து விழிப்புணர்வு வீடியோக்களைத் தயாரித்து பொதுமக்களுக்குச் சொல்லி வருகிறோம். கொரோனா குறித்த பயம், பொதுமக்களின் பேச்சில் தெரிகிறது. ஆனால் அது செயலில் தெரிய வேண்டும். அத்தகைய எச்சரிக்கை உணர்வை இன்னமும் பொதுமக்களிடம் விதைத்தாக வேண்டும்.
  கடந்த ஓராண்டு காலத்தில் விலைமதிப்பில்லாத மனித உயிர்களை இழந்துள்ளோம். இதனால் எத்தனையோ குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக ஆகி உள்ளது. இத்தகைய இழப்புகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

  கடந்த ஓராண்டு காலத்தில் நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள் அடைந்துள்ள துன்ப துயரங்கள் அளவில்லாதது. ஏராளமான மருத்துவர்களை நாம் இழந்துள்ளோம். மருத்துவத்துறையே மிகப்பெரிய மனரீதியான நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. தங்களது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு இதற்கு மேலும் சுமையை, அழுத்தத்தைக் கொடுக்க முடியாது.
  கொரோனா காரணமான மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பவர்கள் பள்ளி - கல்லூரி மாணவ, மாணவியர்கள். அவர்களுக்கு விடுமுறை என்பது மகிழ்ச்சிக்குரிய காலமாக இருந்தது, இப்போது மிகப் பெரிய துன்பம் தருவதாக மாறிவிட்டது.

  மன அழுத்தம் கொண்டவர்களாக அவர்கள் மாறிவிடக் கூடும். இன்னும் எத்தனை மாதங்கள் பள்ளி, கல்லூரிகளை மூடி வைத்திருக்க முடியும்?அவர்களுக்கு விரைவில் கல்வியையும் எதிர் காலத்தையும் உருவாக்கித் தந்தாக வேண்டும்.
  இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டு, இங்கு வருவதற்கு முன்பாக, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினேன். அதில் அவர்களது ஒருமித்த கருத்தாக, தளர்வுகளற்ற ஊரடங்கினை முழுமையாக, தீவிரமாக அமல்படுத்தினால் மட்டுமே, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த இயலும் என்று ஆலோசனை வழங்கினார்கள்.

  மாவட்டங்களில் நான் மேற்கொண்ட பயணங்களின் போதும், இதே கருத்து பரவலாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது.
  எனவே, மேற்படி சூழ்நிலையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்த முடிவினை அரசு எடுக்க வேண்டியுள்ளது.
  நோய்த் தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஏற்கெனவே உங்கள் அனைவரது ஆலோசனைகளையும் பெற்று, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
  எனவே, தற்போதைய நிலையில், காலத்தின் அருமை கருதி, வருகை புரிந்திருக்கும் மாண்புமிகு உறுப்பினர்கள், ஊரடங்கு குறித்த தங்களது மேலான கருத்துகளை மட்டும் குறிப்பாகத் தெரிவிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.
  Published by:Ramprasath H
  First published: