• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ''பேரறிவாளன் கருணை மனு மீது தமிழக ஆளுநர் சுதந்திரமாகவும், சட்டப்படியும் முடிவெடுக்கலாம் '' - மத்திய அரசு

''பேரறிவாளன் கருணை மனு மீது தமிழக ஆளுநர் சுதந்திரமாகவும், சட்டப்படியும் முடிவெடுக்கலாம் '' - மத்திய அரசு

  • Share this:
    பேரறிவாளன் கருணை மனு மீது தமிழக ஆளுநர் சுதந்திரமாகவும், சட்டப்படியும் முடிவெடுக்கலாம் என உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்கும்படி, தமிழக அமைச்சரவை, 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பியது. அந்த பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தன்னை விடுதலை செய்யமால் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாகவும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் நளினி ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி சுப்பையா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் முகமது நஸிம்கான் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

    அந்த பதிலில், சட்டவிரோதமாக சிறையில் இருப்பதாக நளினி கூறுவதை ஏற்க முடியாது என்றும் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்த தமிழக அரசின் கடிதத்தை நிராகரித்து மத்திய அரசு 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழக ஆளுநரிடம் பேரறிவாளன் அளித்த கருணை மனு நிலுவையில் உள்ளதாகவும், அதில் சுதந்திரமாகவும் சட்டப்படியும் முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதேசமயம், தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் என்ற நளினியின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, வழக்கு விசாரணையை 12ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: