தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆளுநருடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது முதல்வருடன் தலைமைச் செயலாளர் இறையன்பு, அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக உதவி செய்யும் வகையில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது நேரடியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதி மூலமாகவோ நிவாரண உதவி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
பேரிடர் காலத்தில் அளிக்கக்கூடிய நன்கொடைகள் அனைத்தும் ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு நிலையங்கள் அமைத்தல், தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ கருவிகள் வாங்க பயன்படும். நன்கொடை விவரங்கள் மற்றும் இந்த நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் வெளிப்படையாக பொதுவெளியில் வெளியிடப்படும் எனத் தெரிவித்திருந்தார். இதையடுத்து பல்வேறு தரப்பினரும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த தொகையை நிவாரணமாக வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது விருப்பப்படி மானியத்திலிருந்து ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒரு மாத ஊதியத்தைத் தனது சொந்த பங்களிப்பாகவும் பொது நிவாரணத்துக்கு வழங்கினார். இதனைப்பெற்றுக்கொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு தனது நன்றியை தெரிவித்தார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.