5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு செவிலியர்கள் போராட்டம்

Youtube Video

தஞ்சை அரசு மருத்துவமனை வாயிலில் 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 • Share this:
  5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை செவிலியர்கள் ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், 5 கட்ட காலமுறை ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை செவிலியர்கள் இன்று ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  அதன்படி கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா காலத்தில் பணியாற்றி உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

  கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் கருப்பு பட்டைகளை அணிந்து கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப செவிலியர்களை நியமிக்க வேண்டும் எனவும் கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஒரு மாத ஊக்க தொகை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

  இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை அரசு மருத்துவமனை வாயிலில் 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 3 நாட்கள் கருப்பு பட்டையை அணிந்து பணியாற்ற போவதாகவும் தங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காவிட்டால் செயற்குழுவை கூட்டி அடுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

  கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செவிலியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தொகுப்பூதிய முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், கொரோனா காலத்தில் பணியாற்றி உயிர் நீத்த செவிலியர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
  Published by:Vijay R
  First published: