புதுக்கோட்டை மாவட்டத்தை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன், புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் சாதிய வன்கொடுமை உள்ளது என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக கூறினார். கோயிலுக்குள் பட்டியலின மக்களை மாவட்ட ஆட்சியரும், எஸ்.பி.யும் அழைத்து சென்றது ஆறுதலையும், பெருமையும் தருவதாக தெரிவித்த அவர், வீரம் என்பது மனதில் இருக்கிறது என்பதை இரண்டு பெண் அதிகாரிகளும் செயல்படுத்தி காட்டியிருப்பதாக குறிப்பிட்டார். வேங்கைவயலில் பட்டியலின் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றத்தில் தொடர்புடையவர்களை எவரையும் தப்பவிடாமல் அரசு கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இரட்டை குவளை முறை உள்ளது. தமிழ்நாடு அரசும் அதிகாரிகளும் நினைத்தால் ஒரே நாளில் இரட்டை குவளை முறையை ஒழித்துக்கட்ட முடியும். அரசும் அதிகாரிகளும் நினைத்தால் 24 மணி நேரத்தில் ஜாதிய கொடுமைகளை ஒழிக்க முடியும், ஆனால் அரசும் அதிகாரிகளும் மெத்தனமாக இருக்கிறார்கள். தயக்கம் காட்டுகின்றனர். வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்பது ஒன்றிய அரசு இயற்றிய சட்டம், இதை முறையாக செயல்படுத்தினாலே ஜாதிய வன்கொடுமை இருக்காது” என கூறினார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திருமாவிற்காகவோ விடுதலை சிறுத்தைகளுக்காகவோ இல்லை, அரசின் நன்மதிப்பிற்காக செய்ய வேண்டும். திராவிட மாடல் ஆட்சிக்காக செய்ய வேண்டும் என பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pudukkottai, Thirumavalavan, Viduthalai Chiruthaigal Katchi