ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பொங்கல் பரிசு ரூ.2500 ரொக்க பணத்துடன் வேட்டி, சேலை, கரும்பு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் - விஜயகாந்த் கோரிக்கை

பொங்கல் பரிசு ரூ.2500 ரொக்க பணத்துடன் வேட்டி, சேலை, கரும்பு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் - விஜயகாந்த் கோரிக்கை

ரேஷன் கடை பொங்கல் பரிசு

ரேஷன் கடை பொங்கல் பரிசு

பரிசுத் தொகுப்புகளில் பல்வேறு குறைகளை கண்டுபிடிப்பதால், தற்போது பணமாக கொடுக்கப்பட்டு உள்ளது - அமைச்சர் எ.வ.வேலு

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் பொங்கல் தொகுப்பில் கரும்பை அரசு வழங்கவில்லை. பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பையும் சேர்த்து வழங்கக் கோரி பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களிடம் இருந்து ஏன் தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்யவில்லை என்று அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார்.

பரிசுத் தொகுப்புகளில் பல்வேறு குறைகளை கண்டுபிடிப்பதால், தற்போது பணமாக கொடுக்கப்பட்டு உள்ளது என்றும் கூறினார். கரும்பை கொடுத்தால் முக்கால் கரும்பு, ஒண்ணே கால் கரும்பு கொடுப்பதாகவும், முந்திரி பருப்பை கொடுத்தால் சிறிய முந்திரியாக இருப்பதாகவும்,வெல்லம் கொடுத்தால் ஒழுகுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.

“கோட்சேவின் வாரிசுகளுக்கு நேருவின் வாரிசுகளை பார்த்தால்..” - முதலமைச்சர் ஸ்டாலின்

இந்நிலையில் பொங்கல் சிறப்பு தொகுப்பாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, செங்குகரும்பு வழங்காததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ.1000 மற்றுமே அறிவித்த நிலையில், குறைந்தபட்சம், கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட ரூ.2500 ரொக்க பணத்துடன் கரும்பு வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.

இதனை தொடர்ந்து தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தும் கடந்த ஆட்சியில் வழங்கிய ரூ.2500யையாவது வழங்க வேண்டும் என கோரியுள்ளார். அது மட்டுமின்றி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வேட்டி சட்டை மற்றும் கரும்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த 2021ல் அதிமுக ஆட்சியின் போது அரிசி, வெல்லம், கரும்பு என 21 பொருட்களுடன் ரூ.2500 பரிசு வழங்கப்பட்டது. ஆனால் 2022 திமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பாக பச்சரிசி, வெல்லம், நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டன. பொங்கல் பரிசில் ரொக்கப்பணம் இல்லை. மேலும் பொங்கலுக்கு வழங்கப்பட்ட பொருட்களின் தரம் குறித்து விமர்சனங்களும் அப்போது எழுந்தன.

இந்த நிலையில் 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கமும் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரையும் வழங்கப்படும் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. மேலும் பொங்கல் பரிசில் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறவில்லை.

அறிவிக்கப்பட்ட ரொக்கப்பணமும் குறைவாக உள்ளது. ஏற்கனவே சொத்து வரி, மின் கட்டணம் மற்றும் விலைவாசி உயர்வால் மக்கள் பல்வேறு துயரங்களை சந்தித்து வரும் நிலையில், பொங்கல் பரிசாக ரூ.1000 மட்டும் வழங்கப்படும் என அறிவித்திருப்பதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் 21 பொருட்களுடன் ரூ.2500 ரொக்கமும் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. தற்போது பொங்கல் பொருட்கள் குறைக்கப்பட்டதுடன், ரொக்கமும் குறைவாக அறிவித்திருப்பது ஏழை எளிய மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே தமிழக அரசு மறு பரிசிலனை செய்து, தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை, தமிழக மக்கள் அனைவரும் மன நிறைவோடு சிறப்பாகக் கொண்டாடும் வகையில் கடந்த ஆட்சியில் வழங்கிய குறைந்தபட்சம் 2500 ரூபாயாவது உயர்த்தி வழங்கிட வேண்டும். மேலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவச வேட்டி சேலை வழங்கிட வேண்டும்.

பொங்கல் பரிசில் கரும்பு இடம் பெறாததை கண்டித்து தமிழக விவசாயிகள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் விளைவித்த செங்கரும்பை அரசு கொள்முதல் செய்து, பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் வழங்கி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இந்த பொங்கல் தித்திக்கும் பொங்கலாக அமைய இந்த அரசு நல்ல அறிவிப்பை வெளியிட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

First published:

Tags: CM MK Stalin, Pongal 2023, Pongal Gift, Tamilnadu govt, Vijayakanth