திமுக நடத்திய கிராம சபைக் கூட்டத்திற்கு மக்கள் அளித்த வரவேற்பை பொறுக்கமுடியாமல் அதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ள போதிலும் மக்கள் கிராமசபை கூட்டம் என்ற பெயரில் அது தொடர்ந்து நடைபெறும் என திமுக அமைப்பு அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் சட்டத்துறை இணை செயலாளர் கிரிராஜன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி, கொரோனா காலத்தில் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை செய்யாத தமிழக அரசு, திமுகவின் செயல்பாடுகளைப் பார்த்து அஞ்சி வருவதாக கூறினார்
காஞ்சிபுரம் மாவட்டம் குன்னத்தில் திமுக தலைவர் கடந்த 23-ஆம் தேதி தொடங்கிய கிராம சபைக் கூட்டத்திற்கும் அதைத் தொடர்ந்து அதற்கு மக்கள் அளித்துவரும் அமோக ஆதரவையும் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அதற்கு தடை விதித்திருப்பதாக அவர் கூறினார். இருப்பினும் மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில், கூட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் இதற்கான விளக்கத்தை கடிதமாக கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மாவிடம் திமுக அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சட்ட விதிகளுக்கு உட்பட்டே மக்களை சந்திக்கும் கூட்டங்களை திமுக நடத்தி வருவதாகவும் அதற்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த முயற்சியையும் திமுக சந்திக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் தமிழக அரசின் செயல்பாடுகளில் ஊழல் இல்லை என்பது உண்மை என பாஜக எல். முருகன் கூறியதற்கு, பாஜக முருகனுக்கு கண், காது இல்லை. பேசுவதற்கு வாய் கூட இல்லை என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்