ஒரு அரசு மருத்துவருக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? விஜயபாஸ்கர் வெளியிட்ட ரிப்போர்ட்

அமைச்சர் விஜயபாஸ்கர்

 • News18
 • Last Updated :
 • Share this:
  காலமுறை ஊதிய உயர்வு, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்களை உயர்த்துவது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் 7-வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் கொட்டும் மழையில் மருத்துவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 8 மருத்துவர்களில் 4 பேரின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்களின் தொடர் போராட்டத்தால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

  வேலை நிறுத்தப் போராட்டத்தை அடுத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து மருத்துவர்கள் அனைவரும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

  இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே, ஒவ்வொரு மருத்துவ மாணவருக்கும், ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து, மருத்துவர்களாக உருவாக்கப்படுவதாக குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், அரசுக்கு நெருக்கடி தருவதற்காகவே சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், போராட்டத்தை அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்காது என்றும், உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

  மருத்துவர்களின் போராட்டம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அரசின் கோரிக்கையை ஏற்று ஆயிரத்து 550 மருத்துவர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 50 மருத்துவர்களை மட்டுமே பணியிட மாற்றம் செய்துள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும் இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பாத மருத்துவர்களின் பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டு உடனடியாக நிரப்பப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.

  அப்போது மருத்துவர்களின் சம்பளம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு 30 முதல் 40 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. ஆனால் எம்.பி.பி.எஸ் படித்து அரசு மருத்துவமனையில் சேர்ந்ததுமே ஒரு அரசு மருத்துவருக்கு ரூ.80000 சம்பளமாக வழங்கப்படுகிறது.

  அவர் பணியில் சேர்ந்த பிறகு மேல் படிப்பு படிக்க வேண்டும் என்றால் அவர் மேல்படிப்பு படிக்க அனுமதிக்கப்படுகிறார். மேல்படிப்பு படிக்கும் 3 ஆண்டு காலமும் பணிக்காலமாகக் கருதி முழுமையாக ஊதியம் வழங்குகிறோம். மேல்படிப்பு படித்து முடித்து விட்டு மீண்டும் பணிக்கு வரும்போது பணி உயர்வு வழங்கி, அதற்கேற்ற அலவில் ஊதியத்தை உயர்த்தித் தருகிறோம்” என்றார்.

  எம்பிபிஎஸ் படித்த உடன் பணியில் சேரும் மருத்துவர்களுக்கு ரூ.80,000 சம்பளம் எனில் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் எவ்வளவு சம்பள உயர்வு கேட்கிறார்கள் என்ற கேள்வியும் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் கேட்பதாக தெரிவித்தார்.

  இதற்கு பல அரசு மருத்துவர்கள் தரப்பிலும் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ”ஐந்து ஆண்டுகள் சர்வீஸ் முடித்த முதுகலை பட்டம் பெற்ற டாக்டர் கையில் வாங்கும் சம்பளம் 60,000 ரூபாய். அதுவும் 30 வயது வரை சம்பாதிக்காமல் படித்துக் கொண்டே இருந்தவர். அரசு பணியில் இருக்கும் 70% சதவீத டாக்டர்கள் தனியாக பிராக்டீஸ் பண்ணுவதில்லை” என்று சமூக வலைதளங்களில் மருத்துவர்கள் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

  வீடியோ பார்க்க: குழந்தைகள் என்னுடையதுதான் ஆனால் அவரின் மனைவி என் தாய்

  Published by:Sheik Hanifah
  First published: