அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், ஏற்கெனவே இருந்த அமைச்சர்களின் 10 பேரின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன.
விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், அவற்றுடன் சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்பு, ஊரக கடன் ஆகிய பிரிவுகளையும் கவனிப்பார், கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த பெரியசாமி ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியம் ஆகிய துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியிடம் இருந்த சிஎம்டிஏ துறை விடுவிக்கப்பட்டுள்ளது. அவர், வீட்டு வசதித்துறை, நகர்ப்புற வளர்ச்சி, நகரமைப்பு திட்டமிடல் ஆகிய துறைகளை மட்டும் இனி கவனிப்பார்.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த பெரிய கருப்பன், கூட்டுறவுத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜ கண்ணப்பன் அதே துறையில் நீடிக்கும் நிலையில், அவருக்கு காதி மற்றும் கிராம தொழில் வாரியத்துறை கூடுதலாக தரப்பட்டுள்ளது. வனத்துறை அமைச்சராக இருந்த கா.ராமச்சந்திரன், சுற்றுலாத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆக்டர் டூ அமைச்சர்… உதயநிதியின் அரசியல் கிராஃப்! - காத்திருக்கும் சவால்கள்!
கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சராக இருக்கும் ஆர்.காந்தி, அதே துறையில் நீடிக்கும் நிலையில், பூதானம் மற்றும் கிராம தானம் துறைகளை கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறை அமைச்சரான சேகர் பாபுவுக்கு, சென்னை பெருநகர வளர்ச்சிக்கழகமான சிஎம்டிஏ கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், புள்ளியியல், ஓய்வூதியம், ஓய்வுக்கால பலன்கள் துறைகளையும் கூடுதலாக கவனிப்பார். விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள மெய்யநாதன், இனி சுற்றுச்சூழல் துறையுடன் மாசு கட்டுப்பாடு மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறையை கவனிப்பார். சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன், வனத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.