இந்தியாவில் பல மாநிலங்களில் இலவசத் திட்டங்கள் இருந்தாலும், அவற்றுக்கு எல்லாம் முன்னோடியாக விளங்குவது தமிழ்நாடு தான். இந்நிலையில், இதுபோன்ற இலவச திட்டங்கள் ஆபத்தானவை என்றும் இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சிக்கல் போன்ற நிலையை ஏற்படுத்தும் என்றும் பிரதமர்
மோடியிடம், உயர்மட்ட அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமூக நீதியில் மற்ற மாநிலங்களை விட மேம்பட்ட நிலையில் உள்ள தமிழகத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக இலவசங்களும் உள்ளன. தமிழக அரசால் வழங்கப்படும் இலவசங்களுக்கு முன்னோடி 1967 சட்டமன்றத் தேர்தலில் பேரறிஞர் அண்ணா வெளியிட்ட, "படி அரிசி திட்டம்".
தமிழ்நாட்டில் அரிசிப் பஞ்சம் நிலவிய அந்த காலத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம், ஒரு படி அரிசி நிச்சயம் என தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார் அண்ணா. இந்த அறிவிப்பால் கவரப்பட்டு, வாக்களித்த மக்களுக்கு, அந்த வாக்குறுதியை நிறைவேற்றி வைத்தார் அண்ணா.
அன்று முதல் இன்று வரை தேர்தல் காலங்களில் நீண்டு வருகின்றன இந்த இலவச அறிவிப்புகள். 2006 சட்டமன்றத் தேர்தலில், இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, ரேஷன் கடைகளில் 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி உள்ளிட்ட வாக்குறுதியை அளித்தார் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி.
இதையும் படிக்க: பயனாளியை வைத்து பெரியார் சமத்துவபுரத்தை திறந்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
அப்போதும் திமுக பெரும் வெற்றிபெற்று, ஆட்சிக்கு வந்ததும், இந்த தேர்தல் அறிக்கைதான், தேர்தலின் முக்கிய ஹீரோ என்று கூறினார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம். 2011 தேர்தல் நேரத்தில் திமுகவைப் போல, இலவசங்களை வாரி வழங்க முடிவு செய்த ஜெயலலிதா, கருணாநிதியின் அறிவிப்புகளுக்கு டஃப் கொடுத்தார்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 35 கிலோ அரிசி இலவசம் என்ற அறிவிப்பை திமுக வெளியிட, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 கிலோ அரிசி இலவசம் என்றது அதிமுக. கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் என்ற கருணாநிதிக்கு பதிலடியாக, +1, +2 மாணவ, மாணவிகளுக்கே இலவச லேப்டாப் என அறிவித்தார் ஜெயலலிதா.
அப்போதும் விடாத திமுக, இலவச மிக்ஸி அல்லது கிரைண்டர் என்று அறிவித்தது. அதிமுகவோ இன்னும் ஒரு படி மேலேபோய், மிக்ஸி, கிரைண்டருடன் மின் விசிறியையும் சேர்த்தே தருகிறோம் என போட்டிக்குப் போட்டியாக அறிவித்து தேர்தலில் வெற்றி கண்டது.
மேலும் படிக்க: பேருந்தில் பாலியல் சீண்டல்.. ஊக்கு மூலம் தக்க பாடம் புகட்டிய பெண்
2016 தேர்தலிலும் 100 யூனிட் மின்சாரம் இலவசம், 50 சதவீத மானியத்தில் பெண்களுக்கு இருசக்கர வாகனம், தாலிக்கு தங்கம் போன்ற இலவசத் திட்டங்களை கையில் வைத்து, வாக்குகளை அள்ளிக் கொண்டது அதிமுக. இதுபோன்ற தமிழ்நாட்டின் அறிவிப்புகளை காப்பிடியத்துதான், ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளன முன்னணி கட்சிகள்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலிலும் குடும்பப் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்ற இலவச அறிவிப்பை வெளியிட்டது திமுக. வழக்கம்போலவே, 500 ரூபாயை கூடுதலாக சேர்த்து, போட்டி அறிவிப்பை வெளியிட்டதோடு, ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம் என்றும் இணைத்துக் கொண்டது அதிமுக.
அதைத் தொடர்ந்து அண்மையில் நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில் கூட, இலவச அறிவிப்புகள்தான் கைகொடுத்தன பாஜகவுக்கும், ஆத் ஆத்மி கட்சிக்கும். இது போன்ற இலவசத் திட்டங்கள்தான், இலங்கையின் இன்றைய நிலைக்கு காரணம் என பிரதமர் மோடிக்கு சுட்டிக்காட்டியுள்ளனர் சில உயர் அதிகாரிகள்.
இதையும் படிக்க: வரதட்சணையை புனிதப்படுத்தும் பாடநூல்களை திரும்பப் பெற வேண்டும் - ராமதாஸ்
இலவசத் திட்டங்களின் போக்கை கட்டுப்படுத்தாவிட்டால், பொருளாதார நெருக்கடி அதிகரித்து, பல மாநிலங்கள் திவால் ஆகும் சூழல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த கருத்தை ஆமோதித்து, இலவச திட்டங்களே தமிழ்நாட்டின் கடன் சுமையை ஆறரை லட்சம் கோடி ரூபாய்க்கு கொண்டு வந்திருப்பதாகவும் இலவசங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசியம் என்றும் சிலர் கூறுகின்றனர்.
ஆனால், இலவசத் திட்டங்கள் தான் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றிருப்பதாக மேலும் சில பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், காலுக்கு செருப்பு வாங்கக் கூட வசதி இல்லாதவர்களுக்கு செய்யும் உதவியை, சொந்தமாக காரில் செல்லும் வசதி படைத்தவர்களுக்கும் வாரி வழங்குவதைத் தடுக்க வேண்டியது அவசியம் என்கிறார்கள்.
நமது நாட்டின் கடன் சுமை, ஏற ஏற, அதற்கு உண்டான விலையையும், விளைவையும் நாமே வரி என்ற பெயரில் சந்திக்க வேண்டும். இலவசங்கள் வசதி படைத்தவர்களுக்கு கிடைக்காமல் இருந்தாலே, நாட்டின் கடன் சுமை குறையும். இதை அரசுகள் உணருவதை விட முக்கியம் மக்கள் உணர்வது.
செய்தியாளர்- பத்மநாபன்இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.