சத்தியமங்கலம் புலிகள் சரணாலய பகுதி, தாளவாடி அருகே உடல்நலன் பாதித்து முடங்கி கிடந்த பெண் யானைக்கு தமிழக வனத்துறையினர் வெற்றிகரமாக சிகிச்சை அளித்தனர். இதைத் தொடர்ந்து அந்த யானையின் உடல்நலன் முன்னேற்றம் அடைந்து வருகிறது.
இதுதொடர்பான வீடியோ ஒன்றை ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். யானைகள் குறித்த வீடியோக்களின் தொகுப்பிற்காக #elephants என்ற ஹேஷ்டேக்குடன் இந்த வீடியோவை அவர் பகிர்ந்திருந்தார்.
வீடியோவுக்கு சுப்ரியா சாஹு எழுதியிருந்த கேப்சனில் (தலைப்பு) “சத்தியமங்கலம் வனப்பகுதியில் குடல் புழுக்களின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த இளம் வயது பெண் யானை ஒன்று, ஆதரவின்றி மயங்கி கிடந்தது. இதைத் தொடர்ந்து தமிழக வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடைத் துறையினர் அந்த யானைக்கு சிகிச்சை அளித்தனர். தற்போது யானையின் உடல்நலன் முன்னேற்றம் அடைந்து வருகிறது. அது முழுமையாக குணம் அடையும் வரையில் சிறப்புக் குழுவினர் அதை கண்காணிப்பார்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
சிகிச்சையைத் தொடர்ந்து, யானை எழுந்து நிற்பதற்கு வனத்துறையினர் ஊக்கம் அளித்தனர். இதைத் தொடர்ந்து, யானை ஒன்றிரண்டு முறை எழுந்து நின்று, தடுமாறி விழுந்தது. ஆனாலும், தொடர் முயற்சியில் யானை எழுந்து நடந்தது. சற்று நேரத்திற்குப் பிறகு அது வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இருப்பினும், சிறப்புக் குழுவினர் அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
இந்த யானைக்கு 4 வயது ஆகிறது என்று வனத்துறையினர் குறிப்பிட்டனர். முன்னதாக, வனப்பகுதிக்கு அருகாமையில் உள்ள கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில், நோயுற்று கிடக்கும் யானை குறித்து வனத்துறையினருக்கு தெரியவந்தது.
TN forest officials & vets successfully treated a young elephant in Satyamangalam Tiger Reserve found lying helplessly due to excessive parasitic worms load.She is doing well & a special team will monitor her health till recovery.Well done DFO Hasanur & Team #TNForest#elephantspic.twitter.com/Z8Qhn8UbWr
இந்த வீடியோ ட்விட்டரில் கடந்த 21ஆம் தேதி வெளியானது. அப்போது முதல் சுமார் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை இந்த வீடியோ பெற்றுள்ளது. ஏராளமானவர்கள் இந்த வீடியோவை தங்களுடைய சமூக வலைதள பேஜ்களில் பகிர்ந்து வருகின்றனர்.
நெட்டிசன்கள் பாராட்டு
யானைக்கு சிகிச்சை அளித்த வனத்துறையினரை நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர். அத்துடன், இதுபோன்ற வீடியோக்களை பகிர்வதன் மூலமாக யானைகளை காக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரிக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
நினா அகதே என்ற டிவிட்டர் பயனாளர் வெளியிட்டுள்ள கமெண்டில், “தமிழக வனத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், ஆபத்தில் உள்ள வனவிலங்குகளை தொடர்ந்து மீட்டு, அவற்றுக்கு சிகிச்சை அளித்து வருவது குறித்த செய்தி மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. உயிர்நேய அடிப்படையிலான இதுபோன்ற செயல்கள் குறித்த தகவல் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்வது பொது விழிப்புணர்வை ஏற்படுத்த மிகுந்த உதவிகரமாக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
யானைகள் மட்டுமல்லாமல் வனங்களில் உள்ள அனைத்து உயிர்களை காக்கவும், வனங்களை காக்கவும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சூழலியல் ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Published by:Elakiya J
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.