பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் திங்கட்கிழமை தொடங்க இருக்கும் நிலையில், விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மூன்றாயிரத்து 185 மையங்களிலும், புதுச்சேரியில் 40 மையங்களிலும் மாணவ மாணவிகள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுத்தேர்வில் மாணவ மாணவிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வு அறையில் மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் பிடிபடும் மாணவர் அல்லது மாணவி தேர்வெழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காப்பி அடித்தல், விடைத்தாள்களை மாற்றி எழுதுததல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டால் பிடிபடும் மாணவர் அல்லது மாணவி ஓராண்டு தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ அல்லது ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகங்கள் முயன்றால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக் காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறையினை தொடர்புக் கொள்ளலாம். மாணவர்கள், 9498383081, 9498383075 எண்ணில் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.
தேர்வுகளில் முறைகேடுகளை தடுப்பதற்காக மூன்றாயிரத்து 100 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.