தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். மத்திய அரசின் அழுத்தம் காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவு அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரில், ஒரு கோடி நுகர்வோர்களுக்கு (42.19 சதவீதம்) மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 100 யூனிட் வரையிலான இலவச மின்சாரம் தொடரும் என்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இருமாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் 2.37 கோடி வீட்டு மின்நுகர்வோர்கள் பயன் அடைவர். குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிப்பாட்டுதலங்கள் முதலிய மின் கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
யாருக்கெல்லாம் எவ்வளவு உயர்கிறது மின் கட்டணம்
இரு மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63.35 இலட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (26.73 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.27.50 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.இரு மாதங்களுக்கு மொத்தம் 300 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 36.25 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (15.30 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (7.94 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இரு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 10.56 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (4.46 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.297.50 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு மொத்தம் 600 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 3.14 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (1.32 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.155 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு மொத்தம் 700 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.96 இலட்சம் வீட்டுமின் நுகர்வோர்களுக்கு (0.83 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.275 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 28 கடிதம்.. மானியம் கட்.. கடனுக்கு நோ - மின்கட்டண உயர்வுக்கு செந்தில்பாலாஜி விளக்கம்
இரு மாதங்களுக்கு மொத்தம் 800 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.26 இலட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (0.53 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.395 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு மொத்தம் 900 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 0.84 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (0.35 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.565 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் மின்சாரத்தில் 500 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மின் கட்டணமாக மொத்தம் ரூ.1,130 வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், மின் நுகர்வு 500 யூனிட்டிலிருந்து, 501 யூனிட்டுகளாக அதிகரிக்கும் பொழுது அதற்கான மின் கட்டணத் தொகையானது 58.10 % அதிகரித்து மொத்தம் ரூ.1,786 ஆக வசூலிக்கப்பட்டு வருகிறது. 500 யூனிட்டுகளுக்கு மேல், ஒரு யூனிட் கூடுதலாக பயன்படுத்தினாலும் மின் நுகர்வோர் கூடுதலாக ரூ.656.60 செலுத்தி வருகின்றனர். இந்த வேறுபாடுகள் முற்றிலும் களையப்பட்டு ஒரே மின் கட்டணமாக மாற்றி அமைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தொழில், வணிக, கல்வி நிலையங்களுக்கான கட்டண உயர்வு எவ்வளவு
93% (2.26 இலட்சம்) சிறு மற்றும் குறுந்தொழில் மின் நுகர்வோர்களுக்கு, குறைந்த அளவாக யூனிட் ஒன்றிற்கு 50 காசுகள் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது 53% (19.28 இலட்சம்) வணிக மின் நுகர்வோர்களுக்கு மாதம் ரூ.50 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட் ஒன்றிற்கு ரூ.1 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி நுகர்வோர்களுக்கு 750 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அதற்கு மேல், யூனிட் ஒன்றிற்கு 70 பைசா உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மின் கட்டணம் உயர்வு: இனி யூனிட்டுக்கு எவ்வளவு செலுத்த வேண்டும்
இலவச மின்சாரத்தை விட்டுக்கொடுக்கும் திட்டம்
100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் குறைக்கப்பட்ட மின்சாரத்திற்குரிய மின் மானியத்தை நுகர்வோர் விரும்பும் பட்சத்தில் "மின்மானியத்தை தாமாக விட்டுக் கொடுக்கும்" திட்டம் மூலம் அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
வீட்டு நுகர்வோர்கள் தங்கள் மின் வாகனத்தை தங்கள் வீட்டிலேயே அதே விகிதப் பட்டியலில் மின்னேற்றம் (charging) செய்து கொள்வதற்கும், அதேபோல், வணிக நுகர்வோர்கள் அதே விகிதப் பட்டியலில் பொது மின்னேற்றம் (charging) செய்வதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.