திமுக ஆட்சிக்கு வந்த 10 மாத காலத்தில் தமிழகத்தின் கடன் அதிகரித்துள்ளதாக
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான
எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், 1 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்தது. ஜெயலலிதாவின் ஆட்சிக்கு பிறகு நாங்கள் ஆட்சியை விட்டு செல்லும் போது வெறும் 4.8 லட்சம் கோடி கடன் மட்டுமே இருந்தது.
ஆனால், 2021-22 திமுக ஆட்சியில் சுமார் 1.08 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளனர். எந்த விதமான முக்கிய திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. 2022-23 ஆண்டில் 1.20 லட்சம் கோடி கடன் பெறப்போவதாக அறிவித்துள்ளனர். திமுகவின் 2 ஆண்டுகால ஆட்சியில் 2.28 லட்சம் கோடி கடன் பெறவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் வருவாய் அதிகரித்து இருக்கிறது. ஆனால் கடன் குறையவில்லை கடனும் அதிகரித்திருக்கிறது. இதன்மூலம் இவர்கள் சரியாக செயல்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. 2022 நிதிநிலை அறிக்கை ஒரு வெத்துவேட்டு அறிக்கை என்று விமர்சித்தார்.
இதையும் படிங்க: ஏழை பெண்களுக்கான தாலிக்கு தங்கம் திட்டம் கைவிடப்படுகிறதா?
கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது ஆனால் இதுவரை அதை குறைப்பதற்கான வழிகள் எதுவும் செய்யவில்லை, திமுக தேர்தல் அறிக்கையில் கட்டுமான பொருட்கள் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் கொண்டு வரப்படும் என்று கூறி இருந்தார்கள் ஆனால் அதையும் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.
பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படவில்லை. இதுவரை பெட்ரோலுக்கு மூன்று ரூபாய் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி அமைத்த பிறகு கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் இன்று நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்றார்கள், அதனை வழங்காமல் திட்டத்தை தள்ளிபோட்டுள்ளனர்.
மேலும் படிங்க: ''மகளிர் உதவித்தொகை மாதம் ரூ. 1,000 பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது'' : பாமக விமர்சனம்
நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய கள்ளாட்டதை திமுக செய்துள்ளதாக குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமி, மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதித்தவர்களுக்கு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. அப்போது சென்னையில் 138 பேர்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் 6 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. இது முறைகேடு, திமுக கள்ள ஓட்டு போட்டுள்ளது என்று கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.