உக்ரைன் ராணுவத்தில் தமிழக மாணவர் சேர்ந்தது குறித்து இந்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரைக் காப்பாற்றிக் கொள்ள உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்பி வரும் நிலையில், கோவையை பூர்வீகமாக கொண்ட சாய்நிகேஷ் ரவிச்சந்திரன் என்ற 21 வயது இளைஞர், உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்துள்ளார். இந்த தகவல் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
முதல் கட்ட விசாரணையின்போது சாய் நிகேஷ் கடந்த 2018-ம் ஆண்டு உக்ரைனுக்கு ஏரோனாடிக்ஸ் எனப்படும் விமானம் தொடர்பான படிப்புகளை படிப்பதற்காக சென்றுள்ளார். கார்கிவ் நகரில் உள்ள தேசிய பல்கலைக் கழகத்தில் சாய் நிகேஷ் படித்து வந்துள்ளார்.
இதையும் படிங்க -
உக்ரைனின் சுமியில் இருந்து இந்திய மாணவர்களை மீட்கும் பணி ஒத்திவைப்பு
முன்பு இந்திய ராணுவத்தில் சேர்வதற்குத்தான் அவருக்கு விருப்பம் இருந்துள்ளது. ஆனால் உயரம் குறைவு காரணமாக அவரது பெயர், இந்திய ராணுவத்தின் தேர்வில் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து உக்ரைனின் பாரா மிலிட்டிரி எனப்படும் ஜார்ஜியன் நேஷ்னல் லீஜியனில் சேர்ந்துள்ளார் சாய் நிகேஷ்.
இதையும் படிங்க -
உக்ரைன் சுமி நகரில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழப்பு
இந்நிலையில் தற்போது ரஷ்ய ராணுவத்திற்கு எதிரான சண்டையில் சாய் நிகேஷ் பங்கேற்றுள்ளார். இந்த தகவல்கள் நாடு முழுவதும் ஆச்சர்யம் அளித்து வரும் நிலையில், அவரது சொந்த ஊரான கோவை துடியலூர் சுப்ரமணியம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் உளவுத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதில் சாய்நிகேஷ் இந்திய ராணுவத்தில் சேர விண்ணப்பித்ததும், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
தற்போதும் சாய் நிகேஷ் தனது குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளார். அவர் கோவைக்கு திரும்ப விரும்பவில்லை என்றும், தொடர்ந்து உக்ரைன் ராணுவத்தில் பணியாற்றப் போவதாகவும் கூறியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.