பொதுமக்களிடம் முரட்டுத்தனமாக நடக்க வேண்டாம்; தரக்குறைவாகப் பேச வேண்டாம்: போலீஸாருக்கு புதுக்கோட்டை எஸ்.பி. உத்தரவு

தமிழக முழு லாக்டவுன் மாதிரிப்படம்.

தமிழகத்தில் மே 10 முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக சில விதிவிலக்குகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கில் பொதுமக்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும் என, புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை உயரதிகாரி எல்.பாலாஜி சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார். 

 • Share this:
  இது குறித்து காவலர்களுக்கு அவர் அறிவுறுத்திய போது, “மே 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படவுள்ளது. இதற்கு தமிழக அரசு பல்வேறு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகளை அனைவரும் முறையாகப் பின்பற்ற வேண்டும்.

  ஊரடங்கின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸார், பொதுமக்களிடம் மென்மையாக நடந்துகொள்ள வேண்டும். லத்தியை வைத்துக்கொண்டு முரட்டுத்தனமாக நடந்துகொள்ளக் கூடாது. தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ள வேண்டும்.

  மருத்துவர்கள், செவிலியர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் வந்தால் அவர்களது அடையாள அட்டையைப் பார்த்துவிட்டு அனுப்பி வைக்க வேண்டும். வணிகர்களையும் பாதுகாப்புடன் செல்ல அறிவுறுத்துங்கள்.

  எந்த இடத்திலும் தேவையற்ற வாக்குவாதம் இருக்கக் கூடாது. இதேபோல், உடல்நிலை சரியில்லாதவர்கள், முதியவர்களின் தேவை அறிந்து அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும்.

  வேண்டுமென்றே பிரச்சினை செய்பவர்களை வீடியோ எடுத்து அதற்கேற்ப வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும், முழு ஊரடங்கின்போது புதுக்கோட்டை மாவட்ட போலீஸார், பொதுமக்களிடம் நண்பனாக நடந்துகொள்ள வேண்டும். இதுவரை அளிக்கப்பட்டு வரும் ஒத்துழைப்பைப் போன்று இன்னும் எதிர்பார்க்கிறேன். ஒழுங்கின்றி நடந்துகொள்ளும் போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்".

  என்று கூறியுள்ளார். முன்னதாக டிஜிபி திரிபாதியும் ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள், வியாபாரிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.

  பொதுமக்களிடம் மிகுந்த கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ நடந்து கொள்ளக் கூடாது.

  பிற அரசுத் துறைகளில் பணிபுரியும் டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், வருவாய்துறையினர், உள்ளாட்சி-நகராட்சி துறையினர், தூய்மை பணியாளர்கள் போன்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

  தடியடி அல்லது பலப்பிரயோகம் செய்து கூட்டத்தை கலைப்பது போன்ற காரியங்களில் எந்த சூழ்நிலையிலும் ஈடுபடக் கூடாது.

  ‘டிரோன்' கேமராக்களை பயன்படுத்தி பொதுமக்கள் கூட்டமாக கூடுகிறார்களா? என்பதை கண்காணித்து முறைப்படுத்த வேண்டும்.

  வணிகர்கள், சிறு வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோர்களிடம் கனிவான முறையில் நடந்து கொள்ள வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்த பின்பு அவர்களிடம் வியாபாரத்தை முடித்து கொள்ளுமாறு கண்ணியமான முறையில் வேண்டுகோள் விடுக்க வேண்டும். சாலையோர வியாபாரிகளிடம் மிகுந்த மனிதாபிமனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களை கடுமையான முறையில் நடத்தக் கூடாது, உள்ளிட்ட அறிவுரைகளை திரிபாதியும் வழங்கியுள்ளார்.
  Published by:Muthukumar
  First published: