ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இந்தியைப் புகுத்தி இன்னொரு மொழிப்போரைத் திணிக்காதீர்! - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

இந்தியைப் புகுத்தி இன்னொரு மொழிப்போரைத் திணிக்காதீர்! - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

MKStalin : இந்தியை மட்டும் பொதுமொழியாக்க அமித் ஷா தலைமையிலான குழு பரிந்துரைக்க வேண்டிய அவசரமோ, அவசியமோ எங்கிருந்து வந்தது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  கட்டாய இந்தியைப் புகுத்தி இன்னொரு மொழிப்போரைத் திணிக்காதீர் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், “ இந்தியத் துணைக் கண்டத்தின் பெருமையும் வலிமையும் பன்முகத்தன்மைதான். ஒரேநாடு என்ற பெயரில் ஒரே மொழி, ஒரே மதம் , ஒரே உணவு, ஒரே கலாசாரம் என நிறுவிட வேண்டும் என்று பாஜக அரசு தொடர்ந்து செயல்படுவது, இந்தியாவின் ஒருமைப்பாடுக்கு ஊறுவிளைவிக்க கூடியதாகும்.

  குடியரசுத் தலைவர் திரெளபது முர்முவை சந்தித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா அலுவல் தொடர்பான நாடாளுமன்ற குழு கடந்த மாதம் அளித்துள்ள அறிக்கையில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி , ஐஐஎம், எய்ம்ஸ் போன்றவற்றிலும் மத்தியப்பல்கலைக்கழகங்களிலும் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும் ஆங்கிலம் உள்ள இடங்களில் இந்தியை இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதை ஏடுகள் பலவும் சுட்டிக்காட்டியுள்ளன.

  இந்தி பேசும் மாநிலங்கள் எனும் Aபிரிவு மாநிலங்களில் இதனை முழுமையாக செயல்படுத்தி ஒரளவு இந்தி பேசும் மாநிலங்களிலும் இதனைத் தொடர்வதுடன் இந்தியா முழுமைக்கும் இந்தியை பொது மொழியாக்கிட வேண்டும் என்கிற பரிந்துரையும் இதில் அடங்கியுள்ளது.

  Also Read: மேடையில் அமர்ந்திருந்த டி.ஆர்.பாலுவுக்கு காலணி எடுத்து தந்த நபர் - வைரலாகும் வீடியோ

  இந்தியை பொதுமொழியக்கிடும் வகையில் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் என மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் இந்தி மொழியே பயிற்று மொழியாக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தியை பயிற்றுவிப்பதற்கான பணியிடங்கள் மூன்றாண்டுகளுக்கு மேல் காலியாக இருந்தால் அந்தக் கல்வி நிறுவனத்தின் தலைவர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அச்சுறுத்தல் தொனியில் பரிந்துரைகள் அமைந்துள்ளன.

  இந்திய அரசியல் சட்டத்தில் 8-வது அட்டவணையில் தமிழ் உள்பட 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. இன்னும் சில மொழிகளை இணைக்க வேண்டும் என அந்த மொழிகளை பேசுவோர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தியை மட்டும் பொதுமொழியாக்க அமித் ஷா தலைமையிலான குழு பரிந்துரைக்க வேண்டிய அவசரமோ, அவசியமோ எங்கிருந்து வந்தது.

  இந்தி படித்தால் மட்டுமே வேலை, ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ள மாநிலங்களிலும் இந்தியைக் கட்டாயமாக்குவது அதிகாரிகளோ அலுவலர்களோ இந்தி மொழியைப் பயன்படுத்தாவிட்டால் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து நடவடிக்கை எடுப்பது என்பன போன்றவை அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

  இந்திக்கு தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலும் புகட்ட நினைப்பது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. இந்தியாவின் ஒருமைப்பாட்டுகு பேராபத்தை விளைவிக்கக்கூடியது.வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்ட இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைச் சரிசமமாக நடத்திடவேண்டும். அதற்கு நேர்மறையாக மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து இந்தியை கட்டாயமாக்க முயன்று இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது தினித்திட வேண்டாம். எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம் என மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்”எனத் தெரிவித்துள்ளார்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: DMK, Hindi, MK Stalin, Tamil News