உயிர்பலிக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்- சகோதரனாக கேட்கிறேன்: முதல்வர் !

ஸ்டாலின் இரங்கல்

கல்வியில் சமத்துவத்தைச் சீர்குலைக்கும் நீட் தேர்வு நீக்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    நீட் தேர்வை சட்டப்போராட்டத்தின் மூலம் விரட்டுவோம் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களின் உயிர் பலிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சராக மட்டுமின்றி சகோதரனாகவும் கைகளைப் பற்றிகொண்டு கேட்பதாக தெரிவித்துள்ளார்.

    அரியலூர் சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த  கருணாநிதி-ஜெயலட்சுமி தம்பதியினரின் மகளான கனிமொழி அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வை எழுதியிருந்தார். தேர்வை சரியாக எழுதவில்லை என்று மன உளைச்சலில் இருந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த ஞாயிறன்று நீட் தேர்வு எழுதவிருந்த மாணவர் தனுஷ் தற்கொலை செய்துகொண்ட நிலையில், மாணவி கனிமொழியின் இறப்பு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மாணவி கனிமொழியின் இறப்பு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் எனும் உயிர்க் கொல்லிக்கு அரியலூர் மாணவி கனிமொழி பலியாகியிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. மாணவி அனிதா தொடங்கி கனிமொழி வரை மாணவச் செல்வங்களின் உயிர்ப் பலிக்கு இத்துடனாவது முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று மாணவச் சமுதாயத்தையும் அவர்களின் பெற்றோரையும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமின்றி, ஒரு சகோதரனாகவும் கைகளைப் பற்றிக் கொண்டு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வினைத் தொடக்கம் முதலே எதிர்த்து வருவதாகவும் அதற்கான சட்டப் போராட்டத்தையும் முழுவீச்சில் தொடங்கியிருக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ள  மு.க.ஸ்டாலின், “ பா.ஜ.க. தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமுன்வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, நீட் தேர்வை முழுமையாக நீக்கும் வரை இந்தச் சட்டப் போராட்டத்தில் எவ்வித சமரசமும் கிடையாது என்ற உறுதியினை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வழங்குகிறேன்.

    மேலும் படிக்க: நீட் தேர்வை வைத்து அரசியல் வேண்டாம் - திமுகவுக்கு அண்ணாமலை அட்வைஸ்


    நீட் தேர்வு என்பது தகுதியை எடை போடும் தேர்வல்ல என்பதை, ஆள்மாறாட்டம் - வினாத்தாள் விற்பனை - பயிற்சி நிறுவன தில்லுமுல்லுகள் உள்ளிட்ட பல மோசடிகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன. கல்வியில் சமத்துவத்தைச் சீர்குலைக்கும் நீட் தேர்வு நீக்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதையும்  படிக்க:மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்களாக கனிமொழி, ராஜேஷ்குமார் அறிவிப்பு!

    மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிகாகப் பல பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பும் பெற்றோர், தங்கள் வீட்டு மாணவச் செல்வங்கள் மனந்தளராதிருக்கும் பயிற்சியைத் தாங்களே அளித்து, அவர்கள் மனதில் நம்பிக்கையை வளர்த்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உயிர்காக்கும் மருத்துவப் படிப்புக்காக, தற்கொலை செய்து உயிர்விடும் அவலத்தைத் தடுத்திடுவோம் என்றும் சட்டப் போராட்டத்தின் மூலம் நீட்டை விரட்டுவோம் என்றும் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

    ம்மாணவி கனிமொழியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின்,  இனி இதுபோன்ற இன்னொரு இரங்கல் செய்திக்கு இடம்தராத சூழலை உருவாக்கிடுவோம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Murugesh M
    First published: