முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசு: தமிழக அரசு அறிவிப்பு

பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசு: தமிழக அரசு அறிவிப்பு

மாரியப்பன் தங்கவேலு

மாரியப்பன் தங்கவேலு

பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலுக்கு பிரதமர் உட்பட பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு சார்பில் ரூ. 2 கோடி ஊக்கப்பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பாரலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுக்கு தமிழக அரசு ரூ.  2 கோடி ஊக்கப்பரிசு அறிவித்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பம் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார். பாராலிம்பிக் போட்டியில் அவர் பெறும் இரண்டாவது பதக்கம் இதுவாகும். கடந்த 2016ம் ஆண்டு பிரேசிலில்  நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் அவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். மற்றொரு இந்திய வீரர் சரத் குமார் வெண்கல பதக்கம் வென்றிருந்தார்.

இவர்களுக்கு பிரதமர் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல், தமிழக அரசு சார்பில் ரூ. 2 கோடி ஊக்கப்பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாராலிம்பிக் : ஓரே போட்டியில் வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை வென்ற இந்தியா!

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டின் ‘தங்கமகன்’ என தடகள விளையாட்டுப் போட்டிகளில் புகழ்பெற்ற மாரியப்பன் தங்கவேலு, டோக்கியோ பாரலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் மீண்டும் பெருமை தேடித் தந்திருக்கும் அவரைத் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் வாழ்த்தி மகிழ்கிறேன்.

மேலும் படிக்க: மாரியப்பன் தங்கவேலு சாதனையால் இந்தியா பெருமை கொள்கிறது: பிரதமர் மோடி பாராட்டு!

ஏழ்மையான வாழ்வையும், சவாலான உடல்நிலையையும் சளைக்காத தன் திறமையால் வென்று, ஒவ்வொரு இளைஞர் உள்ளத்திலும் ஊக்கத்தை விதைக்கும் அவர் பத்மஸ்ரீ, அர்ஜூனா விருது, மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது எனப் பல பெருமைகளைப் பெற்றிருக்கிறார்.

டோக்கியோ பாராலிம்பிக்கில் திரு.மாரியப்பன் தங்கவேலு அவர்களின் வெள்ளிப்பதக்கச் சாதனையைப் பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.2 கோடி ஊக்கப் பரிசு அளிக்கப்படுகிறது. விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டின் சாதனைப் பயணம் தொடரட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Mariyappan Thangavelu, MK Stalin, News On Instagram