Home /News /tamil-nadu /

முதல்வர் பழனிசாமி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி அரங்கு சரிந்ததால் பரபரப்பு!

முதல்வர் பழனிசாமி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி அரங்கு சரிந்ததால் பரபரப்பு!

தமிழக முதல்வர்

தமிழக முதல்வர்

தமிழக முதல்வர் துவக்கி வைக்க உள்ள விவசாய கண்காட்சி அரங்குகள் திடீரென்று பலத்த காற்றுக்கு சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே கூட்ரோடு ஆட்டு பண்ணை வளாகத்தில் சுமார் 1100 ஏக்கர் நிலப்பரப்பில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரி அமைக்க நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்ட உள்ளார் . இந்த விழா நடக்கும் மேடை அருகே விவசாய கண்காட்சியும் கால்நடை கண்காட்சியும் அமைப்பதற்காக சுமார் 200 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகள் அமைக்கும் பணிகள் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று பிற்பகல் 4 மணி அளவில் இந்த விவசாய கண்காட்சி அரங்குகளின் ஒரு பகுதி பலத்த காற்றுக்கு திடீரென்று சாய்ந்து சரிந்தன. அரங்குகள் சரிந்து விழுவதை பார்த்த அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியே தப்பி ஓடினார்கள். இதனால் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்கள் .

இந்த நிகழ்வு நடக்கும் சிறிது நேரத்திற்கு முன்பு தான் தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முதல்வர் கலந்து கொள்ளும் விழா மேடை மற்றும் அவர் துவக்கி வைக்க உள்ள விவசாய கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு சென்றார்.

அமைச்சர் பார்வையிட்டு சென்ற சிறிது நேரத்திலேயே அமைக்கப்பட்டிருந்த விவசாய கண்காட்சியின் அரங்குகள் திடீரென்று சாய்ந்து சரிந்து விழுந்ததால் அங்கு ஒரு வித பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் உடனடியாக சரிந்து விழுந்த அரங்குகளை சீர் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.
Published by:Sheik Hanifah
First published:

Tags: Chief Minister Edappadi Palanisamy

அடுத்த செய்தி