தொகுதிப் பங்கீட்டு பேச்சே தொடங்கவில்லை ஆனால் பாஜக பிரச்சாரம் தடபுடல்: அதிமுகவினர் அதிர்ச்சி

தொகுதிப் பங்கீட்டு பேச்சே தொடங்கவில்லை ஆனால் பாஜக பிரச்சாரம் தடபுடல்: அதிமுகவினர் அதிர்ச்சி

பா.ஜ.க

இப்போதைய நிலவரங்களின் படி பாஜகவுக்கு மதுரையில் எந்தத் தொகுதி ஒதுக்கப்படும் என்பதெல்லாம் தெரியாத நிலையில் பாஜக பிரச்சாரம், நல உதவிகள் தடபுடலாகியிருப்பது அதிமுகவினரின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளது.

 • Share this:
  அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக் கூட தொடங்கப்படாத நிலையில், மதுரை தெற்கு தொகுதியில் பாஜக போட்டியிடுவதுபோல் அலுவலகம் திறந்து பிரச்சாரம் செய்து வருவது அதிமுகவினர் மத்தியில் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

  கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 7-ல் அதிமுகவும், 3-ல் திமுகவும் வெற்றி பெற்றன. இந்தத் தேர்தலில் மதுரை வடக்கு, கிழக்கு, தெற்கு தொகுதிகளை பாஜக கேட்டு வருகிறது. அதேநேரத்தில் மதுரை தெற்கு, கிழக்கில் பாஜக தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டது.

  மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட முடிவு செய்து, பாஜக மாநில துணைத் தலைவரும் மத்திய மின் தொகுப்பின் தனி இயக்குநராகவும் இருந்து வரும் ஏ.ஆர்.மகாலெட்சுமி தொகுதிக்குள் நல உதவிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

  மதுரை கிழக்கே தாமரையின் இலக்கு என்ற ஹோதாவில் மதுரை புறநகர் பாஜக தலைவர் மகா சுசீந்திரன் தொடர் நிகழ்ச்சிகளை நடத்தி வருவதும் அதிமுகவினரிடையே கடும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

  பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் மதுரை வடக்குத் தொகுதியை தனக்காக பெறும் முயற்சியில் ஈடுபடுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  இப்போதைய நிலவரங்களின் படி பாஜகவுக்கு மதுரையில் எந்தத் தொகுதி ஒதுக்கப்படும் என்பதெல்லாம் தெரியாத நிலையில் பாஜக பிரச்சாரம், நல உதவிகள் தடபுடலாகியிருப்பது அதிமுகவினரின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளது.

  மதுரை தெற்கு தொகுதியில் பாஜக தேர்தல் அலுவலகத்தைத் திறந்து பிரச்சாரத்தைத் தொடங்கி அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. தெற்கு தொகுதியில் தேர்தல் அலுவலகத்தை பாஜக தலைவர் எல்.முருகன் திறந்து வைத்தார். திறந்த ஜீப்பில் எல்.முருகன் வர அவர் அருகில் ஏ.ஆர். மகாலட்சுமி வேட்பாளர் போலவே தோற்றம் கொடுத்ததாகவும் தெரிகிறது.
  Published by:Muthukumar
  First published: