ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, பனை வெல்லம் : தமிழக அரசுக்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை!

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, பனை வெல்லம் : தமிழக அரசுக்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை!

பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு

பொங்கல் தொகுப்புடன் கரும்பு, பனை வெல்லம் வழங்க வேண்டுமென பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோரிக்கை

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

பொங்கல் தொகுப்புடன் கரும்பு, பனை வெல்லம் வழங்க வேண்டுமென பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். 

2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வு ஜனவரி 02 அன்று தமிழ்நாடு முழுவதும் தொடங்குகிறது. என்றாலும் பொங்கல் பரிசுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்ட அறிக்கையில், “விவசாய பெருங்குடி மக்களுக்கு உழவர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். சென்ற ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு என்ற பெயரில் உருகிய வெல்லம், பல்லி இருந்த புளி, பருத்திக்கொட்டை கலந்த மிளகு என்ற பொங்கல் தொகுப்பை வழங்கியது திமுக அரசு.  மக்களின் ஆரோக்கிய நலனை கருத்தில் கொண்டு சென்ற வருடம் வழங்கப்பட்ட தரமற்ற பொங்கல் பரிசை இந்த ஆண்டு தவிர்த்தமைக்கு பொதுமக்கள் சார்பாக நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சிக்கு வந்தால் கரும்பு விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.4000 ஆதார விலையாக வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்த திமுக அரசு, அந்த வாக்குறுதியை மறந்ததோடு மட்டுமல்லாது பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்க மறுத்திருப்பது தேசிய உழவர் தினமான இன்று விவசாய பெருங்குடி மக்களுக்கு திமுக கொடுத்துள்ள மிகப்பெரிய பரிசு. அரசு கொள்முதலை எதிர்நோக்கி இருந்த விவசாயிகளின் நிலை குறித்து திமுகவுக்கு என்ன கவலை?. சிவப்பு கம்பளம் விரித்து வயலில் நடந்த கூட்டத்திற்கு விவசாயியின் வலி என்ன தெரியும்? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு கிலோ அரிசு 21 ரூபாய்க்கும், ஒரு கிலோ சர்க்கரை 31 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யும் தமிழக அரசு,  வழங்கப்படவிருக்கும் பொங்கல் தொகுப்பில் இந்த பொருட்களின் விலை 76 ரூபாய் என கணக்கு காட்டியுள்ளதை பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், “ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பொங்கல் பரிசாக ரூ.5000 வழங்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்திய அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும் இன்றைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது புதல்வர் இப்போது அந்த கோரிக்கையை மறந்துவிட்டார்கள் போல. கொடுத்த வாக்குறுதியை மறந்த இவர்கள், முன்வைத்த கோரிக்கைகளை மட்டும் நினைவில் வைத்திருப்பார்கள் என்று எப்படி எதிர்பார்ப்பது” என்றும் விமர்சித்துள்ளார்.

மேலும், அரசு அறிவித்திருக்கும் பொங்கல் தொகுப்புடன் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் கூடுதலாக ஒரு கரும்பு மற்றும் ஒரு கிலோ பனை வெல்லம் வழங்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

First published:

Tags: CM MK Stalin, Pongal Gift