ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஸ்டாலினுக்கு தமிழ் மேல் என்ன திடீர் கரிசனம்.. தமிழை நாங்க பார்த்துக்கிறோம் நீங்க ஆட்சியை பாருங்க - அண்ணாமலை

ஸ்டாலினுக்கு தமிழ் மேல் என்ன திடீர் கரிசனம்.. தமிழை நாங்க பார்த்துக்கிறோம் நீங்க ஆட்சியை பாருங்க - அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

கம்பராமாயணத்தை ஆபாச புத்தகம் என்றெல்லாம் போற்றியவரை தலைவராக தாங்கிப்பிடித்து சிலை வைத்து கொண்டாடும் திமுகவா தமிழிழைக் காக்கப் போகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழ் மொழியை மக்களாகிய நாங்களே காப்பாற்றிக் கொள்கிறோம். தயவுசெய்து, தங்கள் ஆட்சியை கொஞ்சம் கவனியுங்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  இந்தியை கட்டாயமாக புகுத்தி இன்னொரு மொழிப்போரைத் திணிக்காதீர் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.  மேலும் இந்தியை மட்டும் பொதுமொழியாக்க அமித் ஷா தலைமையிலான குழு பரிந்துரைக்க வேண்டிய அவசரமோ, அவசியமோ எங்கிருந்து வந்தது எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் கூறும் விதமாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  அதில், முதல்வரின் தமிழ்மொழி மீதான இந்த திடீர் கரிசனத்தை எண்ணி சிரிப்பதா…? அழுவதா..? என்றே தெரியவில்லை. எப்போதெல்லாம் திமுகவின் மீது மக்களுக்கு அதிருப்தி அலை வீசுகிறதோ.. எப்போதெல்லாம் ஊடகங்கள் கூட திமுகவிற்கு எதிராக பேசத் தொடங்குகின்றனவோ.. அப்போதெல்லாம் மொழி பிரச்சனையை எழுப்புவது திமுகவின் திராவிட மாடல் என விமர்சித்துள்ளார்.

  எதோ வடநாட்டிலிருந்து ஒரு தீய சக்தி வந்து, தமிழை அழித்து விட போகிறது என்ற, அம்புலிமாமா மாயக் கதையை, அக்காலத்தில் நம்ப வைத்து ஏமாற்றி இருக்கிறார்கள். இதன் மூலம் அந்த காலத்திலெல்லாம், மக்களை அவர்களால் எளிதாக திசைதிருப்ப முடிந்தது. சமூக ஊடகத்தின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில் இதுபோல மக்களை அத்தனை எளிதில் ஏமாற்றிவிட முடியாது என தெரிவித்துள்ளார்.

  ALSO READ | தீபாவளி பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள்! தமிழக அரசின் புதிய ரூல்ஸ்!

  1957 வரை தமிழ் எப்படி அழியாமல் இருந்ததோ..! அது போல தமிழ் மொழி தன்னைத் தானே காத்துக் கொள்ளும், கவலைப்பட வேண்டாம். காலத்தால் அழிக்க முடியாத தமிழ் மொழி, திமுகவை மட்டும் நம்பியிருப்பதாக நினைக்க வேண்டாம். நீங்கள் அதைச் சிதைக்காதிருந்தால் போதும். 1967ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து ஆட்சிப்பொறுப்பில் மாறி மாறி இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம். தமிழ் மொழிக்காக என்ன செய்திருக்கிறது. ஒரு வார்த்தை கூட படிக்காத தமிழ் எழுத தெரியாத ஒரு சமுதாயத்தை உருவாக்கி இருக்கிறது. தமிழில் பேசுவது அவமானம் என்று நினைக்கும் ஒரு தமிழ் சமுதாயத்தை படைத்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.

  எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில், கோடிக்கணக்கான தமிழ் நூல்கள் எல்லாம், புதிய தலைமுறையால் படிக்க முடியாமல் செய்து, தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்றும் திருக்குறளை மலம் என்றும் கம்பராமாயணத்தை ஆபாச புத்தகம் என்றெல்லாம் போற்றியவரை தங்கள் தலைவராக தாங்கிப்பிடித்து ஊரெல்லாம் அவருக்கு சிலை வைத்து கொண்டாடும் திமுகவா தமிழிழைக் காக்கப் போகிறது?.

  திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பதை திமுக அறியுமா? தமிழ் வளர்த்த ஆலயங்களையும், தமிழ் மொழியை காப்பாற்றிய ஆன்மீகத்தையும், மொத்தமாக அழித்தொழிக்கும் திமுகதான், நம்மொழியைக் காக்க போகிறதா? இதை நாங்கள் நம்ப வேண்டுமா என கேள்வி எழுப்பினார்.

  மேலும், மற்ற மாநிலங்களில் எல்லாம் தாய் மொழியை படிக்காமல் எவரும் பள்ளிக் கல்வியை முடிக்க முடியாது. ஆனால் திராவிட மாடலில் மட்டும்தான் இனிய தமிழ் மொழியை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு, இந்தி உட்பட, மற்ற மொழிகளை படித்துக்கொண்டு கல்லூரி வரைக்கும் முடிக்கும் வாய்ப்பை உருவாக்கியது.

  இதனால்தான் தமிழ் மொழியே தெரியாத, தமிழை எழுத, படிக்க, பேசத் தெரியாத, புதிய திராவிட சமுதாயம் உருவாகி இருக்கிறது. இப்படி தமிழ் மொழியையும் தமிழ் கலாச்சாரத்தையும் தமிழ் பண்பாட்டையும் தமிழின் தொன்மையையும் அழித்து ஒழித்து திராவிடத்தை முன்னிறுத்தும் காரணத்திற்காக பிறந்த கட்சிதான் தான் திமுக. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் பிரதமர் மோடியால் ஏற்படுத்தப்பட்ட புதிய தேசியக் கல்விக் கொள்கையின் மூலம், தமிழ் கட்டாயப் பாடமாக மாற்றப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

  தமிழர்களின் அடையாளமாகிய எங்கள் திருக்கோவில்களையும் எங்கள் தாய்மொழியாகிய தமிழ் மொழியையும் மக்களாகிய நாங்களே காப்பாற்றிக் கொள்கிறோம். தயவுசெய்து, கவலைக்கிடமாக இருக்கும், தங்கள் ஆட்சியையும், தமிழ் நாட்டையும், கொஞ்சம் கவனியுங்கள் என வலியுறுத்தினார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Annamalai, BJP, CM MK Stalin, DMK, MK Stalin