பல்வேறு வரி உயர்வுகளை தொடர்ந்து தற்போது தொழில் வரியையும் உயர்த்தப் போவதாக கேள்விப்பட்டோம். சொன்ன வாக்குகளைத்தான் நிறைவேற்றவில்லை, கொஞ்சம் வரிகளையாவது, மக்களின் வலிகளுக்காக குறைக்கலாமே என பாஜக மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்தியை கட்டாயமாக புகுத்தி இன்னொரு மொழிப்போரைத் திணிக்காதீர் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றதை விமர்சித்துள்ளார்.
அதில், தலைமைப் பொறுப்புகளுக்கு ஏன் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயச் சகோதரர்கள், கல்வியில் சிறந்த கனவான்கள் யாரும் கிடைக்கவில்லையா?
தோன்றிய காலத்திலிருந்து சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக, அண்ணாவிற்கு பிறகு, இரண்டே தலைவர்கள், அதுவும் தந்தையும் மகனும் கட்சியை கைப்பற்றி இருக்கிறார்கள். ஆனால் எங்கள் பாரதிய ஜனதா கட்சியில் 40 ஆண்டுகளில், அனைத்துச் சமுதாயத்திலிருந்தும் 11 புதிய தலைவர்கள் உருவாகியிருக்கிறார்கள். இவர்களில் யாரும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் எவரும் கிடையாது.
சமூக நீதி காத்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும், திமுகவில் தாழ்த்தப்பட்டவரோ, பிற்படுத்தப்பட்டவரோ, தலைவராக முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். உண்மை என்னவென்றால் அவர்களால், தலைமைப் பதவிக்கு மனு செய்யக்கூட முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும், முதல்வர் அவர்களுக்கு அன்புடன் ஓர் ஆலோசனை, தமிழக மக்களை நீங்கள் தவறாக எடை போட வேண்டாம். தமிழை அரசியலுக்காக யார் பயன்படுத்துகிறார்கள். தமிழ் மொழியை, உண்மையில் யார் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். தமிழக மக்களின் தலையிலே மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, உயர்வு விலை உயர்வு, என்று பல்வேறு விதமான உயர்வுகளை எல்லாம் ஏற்றி வைத்து தற்போது தொழில் வரியையும் உயர்த்தப் போவதாக கேள்விப்பட்டோம். சொன்ன வாக்குகளைத்தான் நிறைவேற்றவில்லை, கொஞ்சம் வரிகளையாவது, மக்களின் வலிகளுக்காக குறைக்கலாமே என வலியுறுத்தியுள்ளார்.
தயவுசெய்து மக்களையும் கொஞ்சம் கவனியுங்கள். நீங்கள் முதல்வராக இருக்கும் இந்த காலத்தில்தான் மக்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். தமிழர்களின் அடையாளமாகிய எங்கள் திருக்கோயில்களையும் எங்கள் தாய்மொழியாகிய தமிழ் மொழியையும் மக்களாகிய நாங்களே காப்பாற்றிக் கொள்கிறோம். தயவுசெய்து, கவலைக்கிடமாக இருக்கும் தங்கள் ஆட்சியையும், தமிழ் நாட்டையும், கொஞ்சம் கவனியுங்கள் என கேட்டுகொண்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Annamalai, BJP, Central govt, CM MK Stalin, DMK, MK Stalin